“ஒரே பாடலில் ஒன்றேகால் கோடி” ; யாகன் விழாவில் வியாபார நுணுக்கம் பேசிய ஜே.எஸ்.கே சதீஷ்..!

yaagan

தேனியை சுற்றி நடக்கும் கிராமத்து கதையாக ‘யாகன்’ என்கிற படம் உருவாக்கி இருக்கிறது. அறிமுக இயக்குனர் வினோத் தங்கவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தில் டென்மார்க் தமிழரான சஜன் ஹீரோவாக நடிக்க, அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார்..

இலங்கை தமிழரான நிரோ பிரபாகரன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இதில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், மனோஜ் கே.பாரதிராஜா, நமீதா, ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஸ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சதீஸ்குமார், புதிதாக படம் தயாரிக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என சில வியாபார நுணுக்கங்களை பகிர்ந்துகொண்டார்..

“இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள நா.முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகள் பெற்றபோது நானும் அருகில் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வம் உண்டு.. பெருமையும் உண்டு. ‘தங்கமீன்கள்’ படத்தில் அவர் எழுதியுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்னை வியாபாரத்தில் சிந்திக்க வைத்த பாடல்.

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற ஒரு பாடல் மூலம் மட்டும் ஒன்றேகால் கோடி ரூபாய் வந்தது. ‘ரம்மி’ பாடல் காலர் ட்யூன் மூலம் 78 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது. இப்படி எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத வருமானங்கள் உள்ளன. சினிமாவில் வியாபாரம் தெரியாமல் நிறைய தவறுகள் செய்கிறோம். இனி அதைச் செய்யக் கூடாது.

இனிமேல் வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது. யாரோ வியாபாரம் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். நாமே வணிகம் செய்யலாம் இதிலுள்ள வியாபார வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி என்னிடம் கேட்டு வருபவர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். வழிகாட்டத் தயாராக நான் இருக்கிறேன்” என்று கூறினார்..