சூர்யா பேசியது சரியே – காப்பானாக மாறிய சூப்பர்ஸ்டார்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார். மற்ற விழாக்களில் அவர் கலந்துகொள்வதற்கும் இந்த விழாவில் அவர் கொண்டதற்கும் மிகப்பரிய வித்தியாசம் இருந்தது உண்மை..

காரணம் சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விழா நடப்பதும், அதில் சூப்பர்ஸ்டார் ரஜினி கலந்து கொள்வதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது… சூர்யாவின் கருத்தை கமல்ஹாசன் வரவேற்றதோடு அவருக்கு துணையாக நிற்பேன் என்றும் அறிவித்து விட்டார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி சூர்யாவின் கருத்தை ஆதரிப்பாரா? சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவாரா என்ற கேள்விக்குறியுடன் விழா நடந்தது. சூர்யா பலவருடங்களாக ஏழை மாணவர்களுக்கு செய்துவரும் கல்விப்பணி உண்மையிலேயே ரஜினி பல வருடங்களுக்கு முன்பே வியந்து பாராட்டிய ஒன்று.. அப்படிப்பட்ட சூர்யா தற்போது பேசியதும் மிகச்சரியான விஷயம் என்பதாலேயே எதிர்பார்த்தபடியே சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக அறிவித்தார் ரஜினி.

விழாவில் இதுபற்றி சூப்பர்ஸ்டார் ரஜினி பேசும்போது, “சூர்யா விடா முயற்சியில் முன்னேறி இருக்கிறார்… நேருக்கு நேர் படத்தில் அவர் நடிப்பை பார்த்துவிட்டு இவர் நடிகராக தேறுவாரா என்றுதான் நினைத்தேன்… அதன் பிறகு நந்தா, பிதாமகன் படங்களில் மிரட்டினார். இன்றைக்கு சிறந்த நடிகராக வளர்ந்து நிற்கிறார். தன்னை தானே செதுக்கி உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார் சூர்யா. சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமான பிள்ளைகளாக சிவகுமார் வளர்த்திருக்கிறார்..

சமீபத்தில் புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா கூறிய கருத்துகள் சர்ச்சை ஆனது… இங்கே பேசியவர்கள் இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்றார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.. அகரம் பவுண்டேஷன் மூலம் சூர்யா நிறைய உதவிகள் செய்து வருகிறார். மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கிறது… அவர் பேசும் கருத்துக்கள் வரவேற்கதக்கவை. எதிர்காலத்தில் அவரின் சேவை நாட்டுக்கு தேவையாக இருக்கும் என்று சூப்பர்ஸ்டார் ரஜினி பேசினார்…