விவேகம் – விமர்சனம்

vivegam release

அஜித்- இயக்குனர் சிவா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கிறது ‘விவேகம்’

ஜேம்ஸ்பாண்ட் போல சீக்ரெட் ஏஜெண்ட். அஜித்.. வெளிநாட்டில் மனைவி காஜல் அகர்வாலுடன் வசிக்கும் அஜித், விவேக் ஓபராய் உள்ளிட்ட நண்பர்கள் டீமுடன் இன்டர்நேஷனல் கிரிமினல்களை வேட்டையாடுகிறார்.. வெளிநாடுகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய உதவிய ஹேக்கரான அக்சராவை நூறு நாடுகளுக்கு மேல் வலைவீசி தேட, தனது சாமர்த்தியத்தால் அவரை தனது வலையில் சிக்க வைக்கிறார் அஜித்..

ஆனால் இந்தமுயற்சியில் எதிரிகளால் அக்சரா கொல்லப்பட, அவரிடம் மீதமுள்ள இரண்டு ஆயுத சப்ளைக்கான ஆதாரங்கள் இருக்க அவற்றை கைப்பற்றுகிறார் அஜித்.. ஆனால் அவரிடமிருந்து அந்த ஆதாரங்களை கைப்பற்றிக்கொண்டு அஜித்தையே காலிபண்ணும் முயற்சியில் இறங்குகின்றனர் விவேக் ஓபராய் மற்றும் குழுவினர்.

இவர்களது தாக்குதலில் உயிர்பிழைத்து மீண்டு(ம்) தங்களை பழிதீர்க்க வரும் அஜித்தை ஆயுத பரிமாற்றம் செய்த குற்றவாளியாக சேர்க்கின்றனர்.. இப்போது அதிகார வர்க்கம் அஜித்தை வேட்டையாட துடிக்க, இந்த சதுரங்க ஆட்டத்தில் எப்படி அஜித் எதிரிகளை நிர்மூலமாக்குகிறார் என்பதுதான் மீதிக்கதை..

மனதை தொட்டு சொல்லவேண்டும் என்றால் அஜித்தும் சிவாவும் இந்தப்படத்தின் மூலம் தங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டு உள்ளார்கள்.. அந்த அளவுக்கு உழைப்பை கொட்டியுள்ளார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. ஆனால் அஜித் ரசிகர்களை மட்டும் திருப்தி செய்ய முடிவுசெய்த அவர்கள் சாதாரண பாமர ரசிகனை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு டெக்னிக்கலாக எகிறி அடித்திருக்கிறார்கள்.

பல நூறு எதிரிகளை அஜித் கொத்து கொத்து வீழ்த்தும் சாகசங்களை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடித்த டேனியல் கிரேக், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் பார்த்தார்கள் என்றால் அஜித்திடம் தாங்கள் கற்றுக்கொள்ள நிறைய ஐட்டங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வார்கள்..

அக்சராவை அஜித் காப்பாற்றும் காட்சி, இடைவேளைக்குப்பின் எதிரிகளின் முயற்சிகளை ஒவ்வொன்றாக அஜித் முறிடியடிக்கும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கின்றன

காஜல் சென்டிமென்ட்டில் கண்களை குளமாக்க, அறிமுக நாயகி அக்சரா கொஞ்ச நேரமே வந்தாலும் ஆச்சர்யப்பட வைக்கிறார். நண்பனாக இருந்து எதிரியாக மாறும் பக்கா டீசன்ட் வில்லன் கேரக்டரில் விவேக் ஓபராய் கச்சிதம். உடலை அலட்டிக்கொள்ளாமல் வில்லத்தனம் காட்டும் இவரை க்ளைமாக்சில் அஜித்துடன் மோதவிட்டு சமரசம் செய்திருக்கிறார் இயக்குனர் சிவா. கருணாகரன் நானும் இருக்கிறேன் என சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகிறார்.

ஹாலிவுட் தரத்தில் படமெடுக்க நம்மூரிலும் ஆட்கள் இருக்கிறார்கள்.. அதில் நானும் ஒருவன் என காட்சிக்கு காட்சி நிரூபித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. அனிருத்தின் இசை பாடல்களை விட பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் என்பதால் அஜித் சாகசம் செய்யும் காட்சிகள் செம கலக்கலாக இருந்தாலும், அந்த காட்சிகளில் லாஜிக் மீறலோ மீறல்.. ஆரம்ப காட்சியில் தீவிரவாதிகள் தலைவர் இருவரை சுட்டுவிட்டு, நான்கடுக்கு பாதுகாப்பை மீறி வெளியேறும் காட்சிகளில் அவர் எப்படி அந்த நான்கடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே வந்தார் என்பதற்கான கேள்விக்கு பதிலை நாம் தான் தேடிக்கொள்ளவேண்டும் போல..

அதேசமயம் விவேக் ஓபராயின் ஆட்கள் அஜித்தை கண்கொத்தி பாம்பாக தேட, அவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு தனது மனைவி காஜலை சந்திக்கும் காட்சிகள் பலே யுக்தி.. கதை உருவாக்கத்தில் சற்றே சறுக்கினாலும், படத்தை உருவாக்குவதில் பிரமாண்டம் காட்டி திகைக்க வைத்துள்ளார் இயக்குனர் சிவா.

மொத்தத்தில் விவேகம் ஒரு ஹைடெக் டிஜிட்டல் ஆடுபுலி ஆட்டம்..