“நானும் வர்ஜின் பாய் தான்” – வில் அம்பு விழாவில் பாரதிராஜா குறும்பு..!

சுசீந்திரன் தயாரிப்பில், அவரது நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் தான் வில் அம்பு.. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே, சம்ஸ்க்ருதி ஷெனாய் ஆகியோர் நடித்துள்ள இந்தபடத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பாரதிராஜா, வைரமுத்து, கலைப்புலி தாணு, டி.இமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

சுசீந்திரன் பேசும்போது, “வெண்ணிலா கபடி குழு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ‘வில் அம்பு’ படம் எங்கள் பதினான்கு வருட நட்பின் சாட்சி” என்றார்.. மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் வில் வடிவத்தில் அமரவைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டார் யுடிவி தனஞ்செயன்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, “இப்போது தமிழ் சினிமாவில் அழுக்கை அழகாக காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்டத்தக்கது. இப்படி அழுக்கை அழகாக காட்டும் இந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளது” என்றார். விழாவில் பாரதிராஜா பேசியதுதான் ஹைலைட்டாக அமைந்தது. “ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய் தான் என்பதை நிரூபிக்க முடிகிறது” என்று போட்டாரே ஒரு போடு.. அரங்கமே அதிர்ந்தது.