“விஜய்சேதுபதிக்கு பயம் காட்டிய ‘96’ம் த்ரிஷாவும்..!

96

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தப்பட அனுபவம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார் விஜய்சேதுபதி

’செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குக் கூட எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என்று போட்டிருந்தேன். ஆனால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன். ஆனாலும், ஒரு பயமிருக்கிறது. இப்போது படம் எப்படியாவது நன்றாக இருந்துவிடணும் என்ற பயம் அதிகமாகியுள்ளது. அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறேன்.

இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே ரொம்ப நிம்மதியாக வேலை பார்த்தோம். எப்படியென்றால் யாருக்கும் யார் மீதும் சந்தேகம் எழவில்லை. ரசித்து ரசித்து வேலை செய்தோம். இப்படத்தில் அனைவருக்குமே சமமான பங்கு இருக்கிறது. இப்படத்தின் கதையே ஒரு இரவில் நடப்பது தான்.

எனக்கு த்ரிஷாவைப் பார்த்தால் சின்ன வயதிலிருந்தே பயம். ஹோம் வொர்க் பண்ணவில்லை என்றால் அவருடைய படத்தைக் காட்டித்தான் அம்மா பயமுறுத்துவார். நாயகிகள் சின்ன வயதிலே நடிக்க வந்துவிடுகிறார்கள். நிஜத்தில் என்னைவிட சுமார் 7 வருடங்களாவது சின்ன பெண்ணாக இருப்பார் த்ரிஷா” என்று போகிறபோக்கில் த்ரிஷாவின் சீனியாரிட்டியை கலாய்த்தார் விஜய்சேதுபதி.

த்ரிஷா பேசும்போது, “ரஜினி சாருடனும், விஜய் சேதுபதியுடனும் நடிக்க வேண்டும் என்கிற என் ஆசை நிறைவேறி விட்டது. அடுத்த ரவுண்டுக்கு நானும் தயாராகி விட்டேன். பேட்ட படத்திற்காக உடல் எடையையும், தலை முடியையும் குறைத்துக் கொண்டேன். பெரிய சூப்பர் ஸ்டார் என்ற எந்த தலைக்கனமும் இல்லாமல் எளிமையாக பழகினார். உங்களுடன் நடிப்பது என் கனவு என்றேன். கலகலவென சிரித்தார்” என போனஸாக பேட்ட படத்தின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார் த்ரிஷா.