“என் படம் தீபாவளிக்கு ரிலீஸா..?” ; அதிர்ச்சியில் விஜய் ஆண்டனி..!

thimiru pudichavan

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். கணேஷா டைரக்டு செய்திருக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து இருக்கிறார். வரும் தீபாவளி அன்று இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இந்தப்படத்தை முன்கொட்டையே பார்த்துவிட்டு, இந்தப்படத்தில் குறைந்தபட்சம் 25 இடங்களில் கைதட்டலை அள்ளும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.. அந்த தகவலை ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காகவே வந்தேன்” என்றார்.

நாயகி நிவேதா பெத்துராஜ் பேசும்போது, கதையை சொல்லும் போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார், அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன், திடீரென மீன் பாடி வண்டி ஓட்டச் சொன்னார். டப்பிங்கில் படத்தைப் பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு புதுசா நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும்,” என்றார்.

படத்தின் இயக்குனர் கணேஷா பேசுகையில், “பாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக் கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார்.

ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார். ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர்தான் நல்ல படத்தைக் கொடுப்பார் எனச் சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களைக் கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம்படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனச் சொன்னார். அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது,” என்றார்.

முத்தாய்ப்பாக பேசிய விஜய் ஆண்டனி, “என்னோட கடந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. வியாபார ரீதியாக பிரச்சனைகள்லதான் இருந்தேன். பல தடைகளைத் தாண்டிதான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணப் போறேன். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போகுதுன்னு என்னாலையே நம்பமுடியல.

ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுதுங்குறதுக்கு பெரிய காரணம் எதுவும் இல்ல. வேலைய முடிச்சிட்டோம் ரிலீஸ் பண்றோம். பத்துமாசத்துக்கு மேல ஒரு குழந்தை வயித்துக்குள்ள இருந்தா நல்லாயிருக்காது. நிறைய பிரச்சனைகள் வந்திடுது. படம் முடிச்சிட்டோம், அடுத்த படம் `கொலைகாரன்’ இருக்கு, ரிலீஸ் பண்ணிடலாமே டக்குனு, அப்பிடின்னு ஒரு காரணத்துக்காகத்தான் ரிலீஸ் பண்றோம். இதுக்குப் பின்னாடி வேற எந்த உள்நோக்கமும் கிடையாது” என்றார்