“விஜய் ஆண்டனி என் தோழர்” ; காளி நாயகி பெருமிதம்..!

amritha

படை வீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அம்ரிதா.. தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘காளி’ படத்தில் நடித்துள்ளார். பி காம் பட்டதாரியான இவருடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் இவர் தான். “எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படைவீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது” என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா.

மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது, “விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்” என்றார்.

படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் வேலை பார்த்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க என்னை செலுத்தியது” என்கிறார் அம்ரிதா