வானம் கொட்டட்டும் – விமர்சனம்

அரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே வேண்டாமென சென்னைக்கு பிழைப்பு தேடி செல்கிறார் மனைவி ராதிகா. கஷ்டப்பட்டு மகன் விக்ரம் பிரபுவையும் மகன் ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்த்து ஆளாக்குகிறார். அவ்வப்போது ஊரிலிருந்து வரும் பெரியப்பா பாலாஜி சக்திவேல் இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். தந்தையைப் போலவே தொட்டதற்கெல்லாம் கோபப்படும் விக்ரம் பிரபுவை மார்க்கெட்டில் வாழை பழ வியாபாரம் செய்ய ஊக்குவித்து அவரை திசை திருப்புகிறார் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வருகிறார் சரத்குமார். பல வருடங்களாக பிரிந்து இருந்த மகனும் மகளும் தந்தையுடன் ஒட்ட முடியாமல் அவரை அந்நியமாக பார்க்கின்றனர். தலைமுறை இடைவெளி பற்றி புரிந்துகொள்ள முடியாமல் சரத்குமார் தன் வெள்ளந்தி தனத்தால் சில சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சரத்குமாரால் கொல்லப்பட்டவரின் மகன்கள் இருவரில் ஒருவரான நந்தா சரத்குமாரை பழிதீர்க்க காத்துக்கொண்டிருக்கிறார். நந்தாவின் பழிவாங்கும் கோபத்திற்கு சரத்குமார் ஆளானாரா..? அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமான பிணக்கு மறைந்து ஒன்றிணைந்தார்களா என்பது மீதிக்கதை.

நீண்ட நாளைக்கு பிறகு ஒரு அருமையான குடும்ப உறவுகள் சார்ந்த படத்தைப் பார்த்த திருப்தியை இந்த வானம் கொட்டட்டும் கொடுக்கிறது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று இரண்டு இளம் நடிகர்களின் நடிப்பு திறமையோடு சரத்குமார் ராதிகா இருவரின் பாந்தமான நடிப்பும் சேர்ந்து இந்த குடும்பத்திற்குள் நாமும் இணைந்துகொண்ட ஒரு உணர்வை தருவது உண்மை. சரத்குமார், ராதிகா இருவரும் இந்தப்படத்தில் கணவன் மனைவியாக மிகப்பொருத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதேபோல சாந்தனுவுக்கு இந்த படத்தில் அண்டர்ப்ளே செய்யும் அமைதியான வேடம் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். மடோனோ செபாஸ்டியனின் விட்டேத்தியான நடிப்பு சிலாகிக்கும்படியாக இருக்கிறது. நஷ்டப்பட்டு போன கோடீஸ்வரரின் மகளாக அத்தனை சுமைகளையும் தங்கி வாழ்ந்து காட்டியிருக்கிறார் மடோனா செபாஸ்டியன்.

சரத்குமாரின் அண்ணனாக பாலாஜி சக்திவேல் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இனி இவர் தொடர்ந்து முழுநேர நடிகராக மாறி விடலாம். அண்ணன் தங்கையான விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷின் கலாட்டாக்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன படத்தில் வில்லனாக வரும் நந்தா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருப்பது ஆச்சரியமான ஒன்று. தந்தையை கொன்றவனை பழிதீர்க்க துடிக்கும் மகன் கேரக்டர் என்பதால் அவரால் அது புதிதாக எதுவும் செய்ய முடியாமல் போய் விடுவது மட்டும்தான் குறை.

ஷித் ஸ்ரீராமின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பாடத்துக்கு ராம்யம் கூட்டுகின்றன. தேனி மாவட்டம் சின்னமனூர் ஊரையும் சென்னையையும் இணைத்து கூடவே வாழை வியாபாரத்தையும் கதைக்குள் அழகாக நுழைத்து தொய்வில்லாமல் தோரணம் கட்டி உள்ளார்கள் படத்தை தயாரித்துள்ள இயக்குனர் மணிரத்தினமும் இயக்கியுள்ள தனாவும். குடும்பத்துடன் கண்டு மகிழ வேண்டிய படம் தான் இந்த வானம் கொட்டட்டும்.