தொடரி – விமர்சனம்

Thodari Tamil Movie Review

டில்லியில் இருந்து சென்னை வரையிலான பிரேக் பிடிக்காத ரயில் பயணத்தில் நடக்கும் திக்திக் சம்பவங்கள் தான் மொத்தப்படமும்.. அதை இயக்குனர் பிரபு சாலமன் காதல் கலந்து தனது ஸ்டைலில் படமாக்கியுள்ளார்.

ரயிலில் கேண்டீன் சப்ளையராக வேலைபார்ப்பவர் தனுஷ். அனாதையான அவருக்கு அந்த ரயிலில் பயணிக்கும் நடிகை ஒருவரின் டச்சப் பெண்ணாக உதவிக்கு வரும் கீர்த்தி சுரேஷ் மீது லவ்வாகிறது. கீர்த்திக்கு பாடுவதில் ஆர்வம் என தெரிந்துகொண்டு, தனக்கும் வைரமுத்துவுக்கும் நெருங்கிய பழக்கம் என பொய்யாக கூறி, அவருடன் காதலை வளர்க்க முயற்சிக்கிறார் தனுஷ்.

அதேநேரம் இரயிலில் பயணிக்கும் மந்திரி ராதாரவிக்கு பாதுகாவலராக வரும் கமாண்டோ ஹரீஷ் உத்தமனுக்கும் தனுஷுக்கும் உரசல் ஏற்படுகிறது.. இன்னொரு பக்கம் ரயில் ட்ரைவர்களான ஆர்.வி.உதயகுமாருக்கும், குடித்துவிட்டு பணிக்குவந்த போஸ் வெங்கட்டுக்கும் பயணத்தின்போது சர்ச்சை ஏற்பட, எதிர்பாராதவிதமாக பூட்டிய இஞ்சின் கேபினில் உதயகுமார் மரணத்தை தழுவுகிறார்.. ரயில் 130 கி.மீ வேகத்தில் எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் பறக்கிறது.

சரியாக அந்த நேரத்திற்கு முன்புதான் கொள்ளையர்கள் ரயிலில் புகுந்து கொள்ளையடித்து விட்டு தப்பிக்க நினைக்கின்றனர்.. ரயிலில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டதாக தகவல் பரவ, இந்த களேபரத்தில் கமாண்டோ ஹரீஷ் உத்தமனின் துப்பாக்கி காணாமல் போக, அதற்கு காரணமான தனுஷையும், கீர்த்தி சுரேஷையும் தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை சுட்டுத்தள்ள முயற்சிக்கிறார்..

இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராமன், ரயில்வே அதிகாரிகளுடன் சேர்ந்து ரயிலை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார். இறுதியில் ரயில் பெட்டிகளை இஞ்சினில் இருந்து கழட்டிவிட்டால் தப்பிக்கலாம் என்கிற நிலையில் தனுஷின் உதவியை நாடுகிறார்கள்.. இன்ஜினின் அந்தப்பக்கம் கீர்த்தி, இந்தப்பக்கம் தனுஷ்… முடிவு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்…

பிரபு சாலமனின் படங்களில் கதைக்களமாக காடு, யானை, கடல் என அனைத்தும் பிரமாண்டமாகவே இருக்கும்.. இதிலும் முழுப்படத்தையும் ரயிலில் படமாக்கி மீண்டும் பிரமாண்டம் காட்டியுள்ளார்..

தனுஷ் இதில் காதலுக்கு ஏங்கும் சராசரி இளைஞனாக நடித்திருக்கிறார்.. படத்தில் ஆக்சன் காட்சிகளிலும், துணிச்சல் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பிருந்தும் பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். வெள்ளந்தி பெண்ணாக மேக் அப் இல்லாமல் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பில் கனம் அதிகம். சைக்கோ கமாண்டோவாக ஹரீஷ் உத்தமனும், அரசியல்வாதியாக ராதாரவியும் பொருத்தமான தேர்வு.

தம்பி ராமையா, கருணாகரன் அன் கோ இருந்தும் காமெடி ஏரியா காற்று வாங்குகிறது. ரயிலை நிறுத்த மெனக்கெடும் போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன் கச்சிதம். ரயில்வே அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ் இருவரும் ரயிளில் பிரச்சனை தொடங்கிய சமயத்தில் இருந்த ஆரம்ப மனநிலையையும், இறுதியில் மாறும் அவர்களது மனநிலையையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள்..

வழக்கமாக பிரபுசாலமனின் படங்களுக்கு வலு சேர்க்கும் இமானின் இசை இந்தமுறை சுதி சேர்க்க திணறியிருக்கிறது. ரயில் காட்சிகளை படமாக்கியிருக்கும் மகேந்திரனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.. நிஜம் எது, கிராபிக்ஸ் எது என்பதை பல இடங்களில் கண்டுபிடிப்பது சிரமாமகவே இருக்கிறது. குறிப்பாக ரயிலின் மேற்கூரை காட்சிகள் நம்மை பதட்டம் கொள்ள வைக்கின்றன. ஆரம்பகட்டத்தில் மெதுவாக நகரும் கதையையும், க்ளைமாக்சிற்கு முன்பு, சீரியசான நேரத்தில் வரும் காதல் பாடலையும் எடிட்டர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கியிருக்கலாம்.

ரயிலில் ஒரு காமெடி கதையை படமாக்கினாலோ அல்லது காதல் கதையை படமாக்கினாலோ லாஜிக் பார்க்க தேவையில்லை. ஆனால் கடத்தல்காரர்கள், பிரேக் பிடிக்காத ரயில், அதில் ஊசலாடும் பயணிகள் உயிர் என சீரியஸாக களத்தில் இறங்கும்போது லாஜிக் கட்டாயம் இருக்கவேண்டும். ஆனால் பல இடங்களில் பிரபு சாலமன் அதை கண்டுகொள்ளவே இல்லை.

குறிப்பாக படு வேகமாக செல்லும் ரயிலின் மேற்கூரையில் நின்றுகொண்டு செய்யும் சாகசங்கள் நம்பும்படியாக இல்லை. மேற்கூரையில் அத்தனை எதிரிகளை ஒற்றை ஆளாக தாக்கும் தனுஷ், அதன்பின் பயந்தாங்கொள்ளியாக மாறிப்போனது ஏன்..? இரயிலில் சங்கிலியை கழட்டிவிடுவதற்காக இஞ்சின் பக்கம் செல்லும் தனுஷ், அதை முதலிலேயே செய்திருந்தால் அதிகாரிகளின் ஆலோசனைப்படி கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக, கேபினை உடைத்து திறந்து வண்டியை நிறுத்தியிருக்கலாம்.. அதை பண்ணவில்லையே ஏன்..?

இப்படி இன்னும் சில ‘ஏன்’கள் நமக்குள் எட்டிபார்த்தாலும் படம் முழுக்க ஒரு ரயிலை வைத்து ஆங்கில பட பாணியில் பிரமாண்டமாக எடுக்க முடியும் என நிரூபித்த பிரபு சாலமனுக்காக ஒரு முறை இந்தப்படத்தை பார்க்கலாம்