‘தெறி’ – விமர்சனம்

theri_movie_1

விஜய்யின் 59வது படம், ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்கிற சிலபல சிறப்புகளுடன் வெளியாகியிருக்கும் ‘தெறி’ விஜய் ரசிகர்களின் செமத்தியான எதிர்பார்ப்புக்கு தீனி போட்டுள்ளதா..? அலசலாம்…

பிளாஸ்பேக் உத்தியில் சொல்லப்பட்டாலும்கூட, எந்த குழப்பமும் இல்லாத தெளிவான கதைதான். டெபுடி கமிஷனர் விஜய்க்கு, அன்பான அம்மா ராதிகா, காதலியாய் பின் மனைவியாய் அழகு சமந்தா அதன்பின் ஒரு குழந்தை என அழகான குடும்பம். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணை கற்பழித்த வழக்கை விசாரிக்கப்போக, அதில் குற்றவாளியான யார் என கண்டுபிடித்து கொன்று தொங்க விடுகிறார் விஜய்.

விஜய் கொன்றது எம்.எல்.ஏ மகேந்திரன் மகனை.. மகேந்திரன் என்ன பண்ணுவார்..? எஸ்… வழக்கம்போல விஜய் குடும்பத்தில் உள்ளவர்களை அரைகுறையாய் கொல்கிறார். குற்றுயிராக குழந்தை மற்றும் நம்பிக்கைக்குரிய கான்ஸ்டபிள் ராஜேந்திரனுடன் தப்பிக்கும் விஜய் கேரளாவிற்கு சென்று மகளுக்காக அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்.

குடும்பத்துடன் இறந்துவிட்டார் என நினைத்த விஜய் உயிருடன் இருக்கும் தகவல் மகேந்திரனுக்கு தெரிய வருகிறது.. விஜய்யின் மகள் பேபி நைனிகாகவை பஸ் விபத்தில் கொல்ல முயற்சிக்க, வெகுண்டெழும் விஜய் சென்னைக்கு கிளம்புகிறார்.. இறுதியில் அதே..அதே.. சூரசம்ஹாரம் தான்.. சுபம் தான்.

கேரளாவில் அமைதியான வாழ்க்கை வாழும் ‘மாணிக்கம்’ விஜய்யை விட சென்னையில் டெபுடி கமிஷனராக வலம் வரும் ‘பாட்ஷா’ விஜய் தான் ரசிகர்களின் எனர்ஜி டானிக், பூஸ்ட் எல்லாம். ரைம்ஸ் சொல்லிக்கொண்டே ரவுடிகளை வெளுப்பது, சமந்தாவை காதலில் கவிழ்ப்பது, மந்திரி மகேந்திரனுடன் சவால் விட்டு சங்கறுப்பது என மனிதர் ஆல் ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார்.

இரண்டு நாயகிகளில் விஜய்யின் காதலியாக, மனைவியாக வரும் சமந்தா மனதை அள்ளுகிறார். ஹீரோவின் பிளாஸ்பேக் கதையை கேட்கும் டிபிக்கல் நாயகியாக கேப் பில்லிங் மட்டும் பண்ணுகிறார் எமி ஜாக்சன். விஜய்யின் அம்மாவாக கலகலப்பூட்டும் ராதிகா, எதிரியின் கையால் பட்டென உயிர்விட்டு பரிதாபப்பட வைக்கிறார். மீனாவின் மகள் பேபி நைனிகா விஜய்யுடன் பேபி பேபி என செல்லம் கொஞ்சும் காட்சிகளில் க்யூட் பேபியாக மிளிர்கிறார்.

இயக்குனர் மகேந்திரனை முதல்முறையாக அரிதாரம் பூச வைத்து வில்லனாக்கியதில் சபாஷ் சொன்னாலும், இவருக்கு வழக்கமான வில்லன் கிளிஷேக்களை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் மகேந்திரனுக்கு இனி படங்கள் வர ஆரம்பிக்கும். கலகலப்புக்கு விஜய்யுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளார் மொட்ட ராஜேந்திரன்.. ‘ஐ ஆம் வெய்ட்டிங் சார்’ என விஜய்க்கே அவர் பஞ்ச் விடுவது செம.. காளி வெங்கட் இரண்டொரு சீன்களில் உள்ளேன் ஐயா என்பதோடு சரி.

ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்றாலும், மனதில் ரிப்பீட் ஆகும் அளவுக்கு பாடல்களை தரவில்லையே என்கிற குறை நமக்கு ஏற்படுகிறது.. இருந்தாலும் விஜய்க்கான அதிரடி பின்னணி பி.ஜி.எம்களில் தெறிக்க விடுகிறார். கேரளாவிலும் சென்னையிலுமாக பறக்கும் கதையில் ரசிகர்களின் மூடை மாற்றுவதில் ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு..

மிகப்பெரிய திருப்பங்களோ, சஸ்பென்ஸ்களோ இல்லாமல் கதை சொன்னாலும் அதை சீராக சொன்ன விதத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் அட்லி. இருந்தாலும் போலீஸ் கதைக்கே உரித்தான போலீஸ் -ரவுடி ஆடுபுலி ஆட்டத்தில் திருப்பங்களும் சவால்களும் இருந்தால் தானே ஆட்டம் சூடு பிடிக்கும்.. அந்தவகையில் முதல் பாதியில் காட்டிய ‘கெத்’தை இரண்டாம் பாதியில் தக்கவைக்க ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் அட்லி.. குறிப்பாக விஜய் ஒவ்வொரு நபராக பழி வாங்கும் விதத்தில் லாஜிக் செமையாக மிஸ்ஸிங்.. இருந்தாலும் விஜய் படத்தின் விறுவிறுப்பில் அதையெல்லாமா கவனிப்பார்கள்..

மொத்தத்தில் கடந்த வருடம் ‘புலி’யால் ரசிகன் பட்ட காயத்திற்கு ‘தெறி’ மூலம் இதமான மருந்து போட்டுள்ளார் விஜய்..