டெடி – விமர்சனம்

நடிகர்கள் : ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ், கருணாகரன், சாக்சி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் பலர்
இசை : டி.இமான்
டைரக்சன் : சக்தி சௌந்தர்ராஜன்

சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு, பரிதாபப்பட்டு உதவச் சென்ற கல்லூரி மாணவியான சாயிஷாவை கடத்துகிறது ஒரு கும்பல். மேலும் அவரை கோமாவில் ஆழ்த்தி, வெளிநாட்டுக்கும் பார்சல் செய்கின்றனர். மருத்துவமனையில் கோமாவுக்கு செல்லும் முன்பாக, சாயிஷாவின் ஆன்மா, அங்கிருந்த டெடி பியர் பொம்மைக்குள் நுழைகிறது. சாயிஷா மாயமானதை தொடர்ந்து அவரை காப்பாற்றுவதற்காக, சரியான நபரை தேடி அலையும் டெடி பொம்மை கண்ணில் வீரராக தென்படுகிறார் ஆர்யா.

அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, தனக்கு (சாயிஷாவுக்கு) நேர்ந்த விஷயங்களை கூறுகிறது டெடி. இதை தொடர்ந்து, சாயிஷாவை தேடி கண்டுபிடித்து காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் ஆர்யாவுக்கு, ஒரு கும்பல். உடல் உறுப்புகளை திருடி விற்பதற்காக சாயிஷாவை வெளிநாட்டுக்கு கடத்திய விபரம் தெரிய வருகிறது. இதையடுத்து இன்னும் சாயிஷா உயிருடன் இருப்பதாக நம்பும் ஆர்யா, அவரை தேடி வெளிநாட்டுக்கு கிளம்புகிறார். சாயிஷா உயிருடன் தான் இருந்தாரா, அவரை ஆர்யாவால் கண்டுபிடித்து காப்பாற்ற முடிந்ததா, இதில் டெடி பியரின் பங்கு என்ன என்பது மீதிக்கதை

இளைஞர்களை கவரும் விதமான கமர்ஷியல் ஆக்சன், குழந்தைகளை கவரும் விதமாக பேண்டஸி என இரண்டையும் கலந்து இந்த டெடியை உருவாக்கி இருக்கிறார்கள். ஆர்யா என்றாலே நக்கலும் நையாண்டியும் என கலகலப்பாக இருப்பார். அதே சமயம் இந்தப்படத்தில் அதற்கு நேரெதிர்.. ஆனால் கதையுடன் இணைந்து பயணிக்கும் போது அவர் கதாபாத்திரத்துடன் நாமும் இணைந்து கொள்கிறோம்.

அழகுப்பதுமை சாயிஷாவிடம் இரண்டே நாள் கால்ஷீட் வாங்கி காட்சிகளை முடித்திருப்பார்கள் போல.. ஆரம்பத்தில் கொஞ்சம்,, க்ளைமாக்ஸில் கொஞ்சம் என ரேசனில் தரிசனம் தருகிறார் அம்மணி. இருந்தாலும் சாயிஷா அல்லவா..?

உள்நாட்டுக்கு சதீஷ் வெளிநாட்டுக்கு கருணாகரன் என இரண்டு காமெடியன்கள்.. இதில் கருணாகரனுக்குத்தான் வாய்ப்பு அதிகம். வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனியின் புது அவதாரம் ஒகே.. அடுத்தடுத்த படங்களில் இன்னும் மெருகேற்றி கொள்வார் என நம்பலாம். வந்த சுவடு தெரியாமல் ஒரே காட்சியில் மட்டும் வந்து செல்லும் சாக்சி அகர்வால் ஏமாற்றம் தருகிறார்.

இவர்கள் தவிர் படம் முழுதும் பயணிக்கும் டெடி பொம்மை நிச்சயம் குழந்தைகளுக்கான செம என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கும். இந்த டெடியாக ஈ.பி.கோபாலன் என்பவர் நடித்துள்ளார்.

வெளிநாடான அசர்பைஜானில் படமாக்கப்பட்ட காட்சிகள், நாமே அங்கு சுற்றி வந்த உணர்வை தருகின்றன. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் யுவாவுக்கு பாராட்டுக்கள். அதேபோல பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனத்தை செலுத்தியுள்ளார் டி.இமான்.

தனித்தன்மையான கதைகளை படமாக எடுப்பதில் சக்தி சௌந்தர்ராஜன் கவனிக்கத்தக்க இயக்குனராக இருக்கிறார். உடல் உறுப்புகள் திருட்டு என்கிற மையப்புள்ளியை வைத்து ஒரு சுவாரஸ்ய பேண்டசி படத்தை கொடுத்துள்ளார்.. வெளிநாட்டு காட்சிகளில் மற்ற தமிழ்ப்படங்களில் பார்ப்பது போல பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், எல்லாம் சினிமா தானே பாஸ்..? சுவாரஸ்யமாக படத்தை நகர்த்துகிறர்களா என்பது தான் விஷயம்.. அதை சரியாக செய்திருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். ஆனால், கணவன் மனைவியாக மாறிவிட்ட, ஆர்யா-சாயிஷாவை படம் முழுதும் பிரித்து வைத்தது மட்டும் மன்னிக்க முடியாத குற்றம். டெடி பொம்மைக்காவது சாயிஷாவின் குரலை டப்பிங் பேச வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஃபீல் இருந்திருக்கும். இருந்தாலும்,

மொத்தத்தில் இந்த டெடி – க்யூட்…