தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் – விமர்சனம்

பூமியை நோக்கி வரும் காந்தக்கோடுகளால் திடீரென சிக்னல் தடைபட்டு விரைவில் செல்போன் சேவையே சில நாட்கள் முடங்கலாம் என்கிற அபாய அறிவிப்பு ஒரு பக்கம்.. ஆந்திராவில் செல்போன் மூலம் வெடிகுண்டை வெடிக்க வைத்து பல உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதி, அடுத்ததாக சென்னைக்கு வந்திறங்குவது இன்னொரு பக்கம்.. இவை இரண்டுக்கும் சுவராஸ்ய முடிச்சுப்போட்டு ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தியிருக்கிறார்கள்.

 

இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின், ஒரு காமெடியன், ஒரு வில்லன் என்கிற ரெடிமேட் பார்முலாவில் படம் இருந்தாலும் அதில் சுவராஸ்யமாக, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்த விதத்தில் தான் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயாப்பாவின் திறமை பளிச்சிடுகிறது.

 

எலெக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு வீட்டில் இருந்துகொண்டே புதுசு புதுசாக எதையாவது கண்டுபிடிப்பதும், பெட்ரோல் போடாமல் சோலார் பைக் கண்டுபிடித்து ஊரைச்சுற்றி சுற்றிவருவதும், கல்லூரி மாணவர்களுக்கு புராஜெக்ட் பண்ணிக்கொடுத்து காசு பார்ப்பதுமாக முதல் பாதியில் சீரியஸான கேரக்டராக வந்தாலும் ஆடியன்ஸுக்கு காமெடி விருந்து வைக்கிறார் நகுல்.. காதலியே வலிய தேடிவந்து காதலித்தாலும் கூட அவரை தனது எலெக்ட்ரானிக்ஸ் வேலைகளுக்கு ஏவுகிற ஆள் என்றால் எந்த அளவு சீரியஸ் கம் ஜீனியஸ் என பார்த்துக்கொள்ளுங்கள்..

 

நகுலுக்கு பதிலாக காதல் எபிசோடை தன் பக்கம் எடுத்துக்கொள்கிறார் அட்டகத்தி தினேஷ்.. பிந்துமாதவியை காதலிப்பதற்காக அவர் போடும் திட்டம் எல்லாம் ‘அட்டகத்தி’ ரக காமெடிதான். ஆனால் அந்த காதல் எபிசோடை சுவராஸ்யப்படுத்துவது பிந்துமாதவியின் அழகான நடிப்பு தான்..

 

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு பதில், தவறுதலாக தினேஷுக்கும் கவுன்சிலிங் கொடுத்து காதலில் சிக்கும் காட்சிகளில் எல்லாம் கண்களாலேயே பேசுகிம் பிந்து மாதவி, தினேஷை கெட்டவார்த்தையில் திட்டுவதற்கு ட்ரெய்னிங் எடுக்கும் காட்சிகளில் காமெடி ஏரியாவுக்குள்ளும் புகுந்திருக்கிறார். இடைவேளைக்குப்பின் சாவின் விளிம்பில் நிற்கும்போதுபோது பரிதாபத்தையும் அள்ளுகிறார்.

 

நகுலின் ஜோடியாக, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா பக்கத்து வீட்டுப்பெண் போல எதார்த்த அழகுடனும் சின்னச்சின்ன முகபாவங்களுடனும் நம்மை கவர்கிறார். குறிப்பாக நகுலை காதலிக்க அவர் சிரமப்படும் காட்சிகள் எல்லாமே நகைச்சுவை கலாட்டாதான்.

 

கால் டாக்சி ட்ரைவராக வரும் சதீஷ் டாக்சியுடன் கதையையும் நகர்த்திச்செல்கிறார். கஸ்டமர்களிடம் எகிடு தகிடாக பேசி சிக்கலில் மாட்டுவதும், போனை தொலைத்துவிட்டு திருடியவனின் உதவியுடன் கான்பரன்ஸ் காலில் காதலிப்பதும், தான் காதலிக்கும் ரோஷினி, ஒவ்வொரு ஆணின் பெயராக தன்னிடம் சொல்லி அவர்களை புகழும்போது ஷாக் ரியாக்சன் கொடுப்பதுமாக, விறுவிறுப்பான கதையில் இளைப்பாறுதல் கொடுத்திருக்கிறார்.

 

நகுலின் எல்லாம் தெரிந்த ‘எலெக்ட்ரானிக்ஸ்’ அம்மாவாக காமெடியி களைகட்டும் ஊர்வசியின் கேரக்டர் புதுசு, ரவுசு என்றாலும் செயற்கையாக இருக்கிறது. தீவிரவாதி கேரக்டருக்கென்றே எப்படித்தான் ஆட்களை தேடிப்பிடிகிறார்களோ என சொல்லும் வகையில் எம்.டி.ஆசிப்பின் நடிப்பு கச்சிதம். செல்போன் திருடனாக வந்து சதீஷை கலாய்க்கும் பிக்பாக்கெட் பேர்வழியும், சதீஷுடன் லூட்டி அடித்து அவரை டரியலாக்கும் ரோஷினியும் ரசிக்க வைக்கிறார்கள்.

 

ஒன்றுமே தெரியாத மனோபாலா காலேஜ் பிரின்சிபாலாக இருப்பதும், அவ்வளவு பெரிய செல்போன் கம்பெனி ஓனர் சாதாரணமாக ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து, அனுமதியின்றி தங்களது டவரை ஆராய்ச்சி பண்ணும் நகுலை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதும் கொஞ்சம் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரப்படைப்புகள்..

 

விறுவிறுப்பான படம் என்பதால் இரண்டு பாடல்களுடன் அடக்கி வாசித்திருக்கும் தமன், பின்னணி இசையில் வேகம் கூட்டுகிறார். எட்டிப்பார்த்தால் எங்கே  நாமே கீழே விழுந்துவிடுவோமோ என்கிற பீதியை கிளப்புகிறது சென்னையை அடிக்கடி டாப் ஆங்கிளில் காட்டி மிரட்டும் தீபக் குமார்பதியின் ஒளிப்பதிவு.

 

செல்போன் சிக்னலை பாதிக்கும் காந்த அலைகள் தொலைக்காட்சி அலைகளை மட்டும் பாதிக்காமல் விட்டது எப்படி என்பது போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. ஆனால் இப்படியெல்லாம் நடந்தால் என்கிற கான்செப்ட்டில் படத்தின் சுவராஸ்யம் கூடும்போது, இந்த லாஜிக்குகள் பெரிதாக இடைஞ்சல் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. மொத்தத்தில் விறுவிறுப்பான, சுவராஸ்யமான படத்தை தந்த விதத்தில் அறிமுக இயக்குனராக நம் கவனம் ஈர்த்திருக்கிறார் ராயப்பா.