‘ஏலே’ படப்பிடிப்பில் சமுத்திரக்கனியை பிரமிக்க வைத்த பெரியவர்


பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி. என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் ஹலீதா ஷமீம். . இதைத்தொடர்ந்து தற்போது ‘ஏலே’. என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குச்சி ஐஸ் விற்கும் கிராமத்து மனிதராக வித்தியாசமான வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரகனி, நடிகர் மணிகண்டன், இயக்குனர் ஹலீதா ஷமீம், தயாரிப்பாளர் புஷ்கார் காயத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு கிராமத்து மக்களையே நன்கு பழக்கப்படுத்தி வைத்திருந்தார்கள். படப்படிப்புக்கு சென்ற முதல் நாளே நானும் அந்த ஊரில் ஒருவராக மாறிவிட்டேன். அங்கே உள்ள மரத்தடியில் ஒரு கூரை செட் போடச்சொல்லி, அங்கேயே ஒரு கயிற்று கட்டிலில் அமர்ந்தபடி ஜாலியாக பேசி படப்பிடிப்பை முடித்தோம்.

என்னுடைய காட்சிகள் படமான முதல் எட்டு நாட்களுக்கு என்னை பிணமாக நடிக்க வைத்து மட்டுமே காட்சிகளை படமாக்கினார்கள்.. கண்களை மூடியபடி படுத்து கிடப்பதே எனது வேலையாக இருந்தது. ஆனால் அது ஒரு வித்தியாசமான அனுபவம். உடன் நடித்த கிராமத்து பெரிய மனிதர்கள் நடித்த விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஒரு காட்சியில் ரிகர்சல் பார்க்கலாம் வாருங்கள் என உடன் நடிக்கும் பெரியவரை அழைத்தேன். அதெல்லாம் ஆக்சன் சொன்னதும் ஸ்ட்ரெய்ட்டா பார்த்துக்கலாம் தம்பி என கூறியதும் பிரமித்து போனேன்.. அந்த அளவுக்கு நம்மைவிட தெளிவாக இருக்கிறார்கள்.” என கூறினார்.

இந்தப்படம் வரும் பிப்-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.