தயாரிப்பாளராக மாறினார் பிரபுதேவா ; ஒரே நேரத்தில் மூன்று படம்..!

இரண்டு மூன்று ஹிட் படங்கள் கொடுத்துவிட்டாலே இன்றைய இயக்குனர்களும் நடிகர்களும் தங்களுக்கென சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கின்ற இந்த சூழலில் ஒரு நடிகராகவும், ஒரு இயக்குனராகவும் வெற்றிவாகை சூடிய பிரபுதேவா இதுநாள் வரை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிப்பதை பற்றி நினைத்து பார்காதது ஆச்சர்யமான விஷயம் தான். அதற்கேற்ற மாதிரி இந்தி திரையுலகம் அவரை ஒரு பிஸியான இயக்குனராகவே வைத்திருந்தது.

இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க இது தான் சரியான தருணம் என நினைத்ததால் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கிறார். இதில் ஒன்றை மட்டும், அமலாபாலுடன் இணைந்து தயாரிக்கிறார். அந்தப்படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார்.

மற்ற இரண்டு படங்களில் ஒன்றை ஜெயம் ரவி நடிக்க, ரோமியோ ஜூலியட்டை இயக்கிய லட்சுமணனும், மற்றொன்றை ஐசரி கணேஷின் மகன் வருண் நடிக்க, ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குனர் விக்டர் ஜெயராஜும் இயக்குகிறார்கள். இந்த இரண்டு படங்களுக்கும் இமான் இசையமைக்கிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரியதர்ஷன், ஏ.எல்.விஜய், பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவி, அமலாபால் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் பிரபுதேவா பேசும்போது, “நடிகருக்கு என்றால் ஒரு கஷ்டம் இருக்கும், இயக்குநர் என்றால் ஒரு கஷ்டம் இருக்கும். ஆனால் தயாரிப்பாளருக்கு எல்லாவித கஷ்டமும் இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆன பிறகுதான் தெரிந்துகொண்டேன். இன்னும் ஒரு படம் கூட தயாரிக்கவில்லை, ஆனால், அதற்குள்ளே என்னுள் டென்சன் உருவாகிவிட்டது. நான் தயாரிப்பாளர் ஆனதற்கு முழு முதற் காரணம் ஐசரி கணேஷ் தான்” என்றார்.

ஜெயம்ரவி பேசும்போது, “இந்த படத்தின் கதையை ரோமியோ ஜூலியட் லட்சுமண் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அந்த ஒன்லைனை முதலில் நான் பிரபுதேவா மாஸ்டருக்கு போனில் சொன்னேன். அதுவே அவருக்கு பிடித்து விட்டது. அதன் பிறகுதான் லட்சுமண் அவரை சந்தித்து கதையை சொன்னார். அவருக்கு அந்த கதையில் முழு நம்பிக்கை ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்” என்றார்.

இசையமைப்பாளர் இமான் பேசியபோது ஒரு உண்மையை வெளியிட்டார். “என்னை ஒரு இசையமைப்பாளரா முதல் முறையா அங்கீகரித்தவர் பிரபுதேவா. தமிழில் நான் இசையமைத்த முதல் படமான ‘காதலே சுவாசம்’ இயக்குனர் பிரபு நேபாலுடன் சேர்ந்து நாரதகான சபா எதிரில் உள்ள பிரபுதேவா சார் வீட்டுக்கு சென்று முதன்முதலாக என்னோட டியூன்லாம் போட்டுக் காட்டினோம். அப்ப எனக்கு முதன் முதலா என்கரேஜ் பண்ணது பிரபுதேவா மாஸ்டர்தான். இன்றைக்கு அவர் முதன் முதலா தயாரிக்கிற மூன்று படங்களில் நான் இரண்டு படத்துக்கு இசையமைப்பாளர்ங்கறது இன்னொரு பெருமை,” என இமான் பழைய நினைவுகளை அசை போட்டார்.