பரியேறும் பெருமாள் விமர்சனம்

Pariyerum Perumal movie review

இயக்குனர் ராமின் பாசறையில் இருந்து வெளிவந்து இயக்குநராகி இருக்கும் மாரி செல்வம், பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்கியுள்ள படம் என்பதால் இருவித எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘பரியேறும் பெருமாள்’. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கர்ணகொடூரமாக சொல்லாமல் அதேசமயம் மனதில் தைக்கும் விதமாக சொல்லியிருக்கிறார் மாரி செல்வம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கதிர் தன் குடும்பத்தை, தனது இனத்தை சேர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கு தான் படிக்கவேண்டியது அவசியம் என திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஜாதி பாகுபாடு பார்க்காத நல்ல நண்பனாக யோகிபாபு கிடைக்க, ஆங்கிலத்தில் திணறும் கதிருக்கு நல்ல தோழியாக வருகிறார் ஆனந்தி.

கதிருடன் ஆனந்தி நட்பு பாராட்டுவதை காதல் என நினைக்கும், அவரது உறவுக்கார பையன் லிஜிஷ் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜாதிய வன்மத்தை கதிரிடம் காட்டுகிறார். தொடரும் நாட்களில் தன்னையறியாமல் கதிரின் மீது காதலாகும் ஆனந்தி, ஜாதிய வீரியம் எதையும் அறியாமல் தனது வீட்டில் எல்லோரிடமும் அவரது நட்பு குறித்து பெருமையாக பேசுகிறார்.

ஆனந்தியின் அழைப்பை ஏற்று அவரது அக்கா திருமணத்திற்கு வரும் கதிரை, மிகவும் மோசமாக அவமானப்படுத்தி அடித்து துவைத்து அனுப்புகின்றனர் லிஜிஷ் அன் கோ. யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் அதேசமயம் ஆனந்தியிடம் இருந்தும் விலகி செல்கிறார் கதிர். ஆனாலும் ஆனந்தி விடாப்பிடியாக அவரை தேடிவந்து பேச, இன்னும் உக்கிரமாகும் லிஜிஷ் கதிரை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார். ஆணவக்கொலைகளை அசால்ட்டாக செய்து முடிக்கும் கொலைகார கிழவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஜாதிய கொடுமை கதிரையும் காவு கொண்டதா என்பது க்ளைமாக்ஸ்.

என்னதான் சமத்துவம் பேசினாலும் இன்னும் கிராமப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக அவர்களில் இன்றைய இளம் தலைமுறையினர் எவ்வளவு அவமானங்களையும் வலிகளையும் கடந்து செல்கிறார்கள் என்பதை கூட குறைவில்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட இனத்தின் இன்றைய தலைமுறை இளைஞனை பிரதிபலிக்கும் விதமாக காட்சிக்கு காட்சி நடிப்பால் பிரமிப்பூட்டுகிறார் நாயகன் கதிர். தன மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தும்போது அவமானத்தில் குமுறுவதும், பின் நான் ஏன் முன்னுக்கு வரக்கூடாது என வெகுண்டு எழுவதும், நடந்த விஷயங்கள் எதுவுமே நாயகி ஆனந்திக்கு தெரியாமல் பக்குவமாக நடந்துகொள்வதும் என அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்திக்கொண்டு சென்றிருக்கிறார் கதிர்.

சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு இளம்பெண் இப்படியும் கூட வெள்ளந்தியாக இருப்பாளா என ஆச்சர்யப்படுத்துகிறார் ஆனந்தி. ஜாதியின் கொடூர முகத்தை அறியாது தனது வீட்டினரிடம் எல்லாம் கதிரின் புகழ் பாடும் அவரை பார்க்கும்போது ஐயோ பாவம் என்றே சொல்ல தோன்றுகிறது.

கவுண்டர் கொடுத்து கலாய்த்து தள்ளும் யோகிபாபு, இதில் வழித்து சீவிய தாலியுடன் கல்லூரி மாணவனாக குணசித்திர வேடத்திலும் கலக்குகிறார். ஜாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு வெட்டி கெளரவம் பார்க்கும் இன்றைய இளைஞர்கள் யோகிபாபு கேரக்டரை பார்த்தால் திருந்த வாய்ப்புண்டு. ஜாதி வெறி பிடித்து வன்மத்துடன் அலையும் கதாபாத்திரமாக லிஜிஷ் சரியான தேர்வு.. ஆனந்தியின் தந்தையாக நல்லதொரு மாற்றத்திற்கு வித்திடும் சராசரி மனிதராக மாரிமுத்து மனதில் நிற்கிறார்.

ஜாதியை காக்க கொலை செய்வது சாமி காரியம் என சொல்லிச்சொல்லி பதறவைக்கும் கொலைகளை போகிற போக்கில் செய்யும் பெரியவர் கராத்தே வெங்கடேசனின் நடிப்பு மிரள வைக்கிறது. பதறவைக்கிறது. கல்லூரி முதல்வராக வந்து நாயகனை நேர் வழிக்கு திருப்பும் பூ ராமு, கதிரின் அப்பாவாக பெண் தன்மையுடன் வரும் நபர், கதிரிடம் தோழமை காட்டும் அந்த டீச்சர் என படத்தில் பல கேரக்டர்கள் நீண்ட நாளைக்கு நம் மனதைவிட்டு அகல மாட்டர்கள். இவர்கள் எல்லோரையும் விட அந்த வேட்டை நாய் கருப்பி மனதை கனக்க வைக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பெருங்குரலெடுத்து அலறுகின்றன. பின்னணி இசை காட்சிக்கு காட்சி ஆளுக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல கனம் கூட்டுகிறது. அதேபோல ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் வசனங்கள் குறைத்து கதையின் வீரியத்தை கூட்டும் பணியை செவ்வனே செய்திருக்கிறது.

இயக்குனர் மாரி செல்வம் காட்டியிருப்பது ஒரு இளைஞனின் வாழ்க்கை மட்டுமே அல்ல.. தமிழகம் முழுதும் இந்தியா முழுதும் ஜாதிக்கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மாணவர்களின் வாழ்வியல் தான். கல்லூரிக்கு படிக்க வந்தபின்னும் சாதியை சட்டைப்பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு சுற்றும் லிஜிஷ் போன்றவர்களில் சிலரையாவது இந்தப்படம் மடைமாற்றம் செய்யும் என நம்புவோம்.

மொத்தத்தில் இந்த பரியேறும் பெருமாள் ரசிகர்களின் மனதில் ஏறி அமர்ந்துவிட்டான்.