சந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்

chandramouli audio release highlites

முதன்முறையாக கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள படம் சந்திரமௌலி. இயக்குனர் திரு இயக்கியுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி, ரெஜினா, இயக்குனர் மகேந்திரன், சதீஷ், மைம் கோபி, நண்டு ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ஆர்.கண்ணன், ராதாமோகன், சுசீந்திரன், கௌரவ், சசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஹைலைட்டாக அமைந்தது எதுவென்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் வெள்ளந்தியான மனம் திறந்த பேச்சாகத்தான் இருக்க முடியும்.

கௌதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடித்தபோது அந்த அனுபவம் எப்படி இருந்தது என குறிப்பிட்டார். அதை கேட்டு கண்கலங்கிய கார்த்திக், என் தந்தையுடன் என்னால் சேர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.. ஆனால் இன்று என் மகன் சொல்லும்போது அந்த உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

மேலும் தன்மீது காலங்காலமாக வைக்கப்படும் ‘படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார்’ என்கிற குற்றச்சாட்டை மறுத்த கார்த்திக், தாமதத்திற்கு எப்போதும் நான் மட்டுமே காரணமாக இருந்ததில்லை என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் இயக்குனர் கௌரவுக்கு கார்த்திக் முத்தம் கொடுத்தது, ஆர்யாவுக்கு நிஜமாகவே கல்யாணம் நிச்சயமாகி விட்டதாக கார்த்திக் நம்பியது, ஆர்யாவை “நான் உன்னி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஜம்மி” என மேடையிலேயே வரலட்சுமி கலாட்டா செய்தது, நான் திருவுக்காக வந்திருக்கிறேனா, இல்லை வருவுக்காக வந்திருக்கிறேனா என கலாட்டாவாக விஷால் பதில் சொன்னது, முதன்முதலாக இந்தப்படத்தில் பாடகியாக தான் மாறிய அனுபவத்தை நெகிழ்வாக சிவகுமாரின் மகள் பிருந்தா பகிர்ந்துகொண்டது என பல இனிமையான நிகழ்வுகளுடன் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.