மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்

பிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

மார்க்கெட் ஏரியாவில் மிகப்பெரிய டான் ஆரவ்.. அவரது அம்மா ராதிகா லேடி டான்.. வலதுகை ஆதித்யா மேனன், சாம்ஸ் இருவரும்.. தனது காட்பாதர் சாயாஜி ஷிண்டே கொடுக்கும் வேலைகளை கச்சிதமாக செய்து கொடுக்கிறார் ஆரவ்.. ஆனால் அவரை அழிக்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் எதிர் கூட்டத்தை சேர்ந்த ஹரிஷ் பெராடி.

இந்த நிலையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் அப்பாவி இளைஞன் விஹானை சக மாணவியும் கல்லூரி டீன் நாசரின் மகளுமான காவ்யா தாப்பர் விரும்புகிறார். ஆனால் அவர் காதலை ஒதுக்கும் காவ்யா ரவுடியான ஆரவ் மீது காதல் கொள்கிறார்.. ஆனால் அவரை ஆரவ் உதாசீனப்படுத்துகிறார்.. இந்த நிலையில் என்கவுண்டரில் ஆரவ்வை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார் பிரதீப் ராவத்..

ஆனால் எதிர்பாராதவிதமாக குறி தவறி காவ்யாவை காதலிக்கும் அந்த அப்பாவி இளைஞன் விஹான் பலியாகிறார். அடுத்த நொடியே அவரது ஆவி ஆரவ் உடம்பில் புகுந்து கொள்கிறது.. பலசாலியான ஆரவ் அதற்குபின் பயந்தாங்கொள்ளியாக மாறுகிறார்.. இதைத்தொடர்ந்து மார்க்கெட்டிங் ஏரியாவில் இந்த குட்டு வெளிப்படாமல் அமுக்க நினைகிறார்கள் ஆராவின் ஆட்கள்.. ஆனால் அது முடிந்ததா.. அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

பொதுவாக இதுவரை அப்பாவியாக, கோழையாக இருந்தவர்களின் உடலில் ஆவி புகுந்து கொண்டால் அவர்கள் வீரமானவர்களாக மாறி விடுவார்கள் என்றுதான் படங்கள் வந்திருக்கின்றன. இயக்குனர் சரண் இதை அப்படியே உல்டாவாக மாத்தியோசித்து மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் ஆக உருவாக்க முயற்சித்திருக்கிறார். அறிமுக நாயகன் ஆரவ்வுக்கு களையான முகமும் கட்டுமஸ்தான உடலும் கை கொடுத்தாலும், நடிப்பு இன்னும் சரியாக கைவரவில்லை என்பதை பல காட்சிகள் நிரூபிக்கின்றன.. பாலா, பிரபுசாலமன் போன்ற இயக்குனர்களின் கைகளில் சிக்கினால் பட்டை தீட்டப்பட்ட வாய்ப்பு உண்டு என எதிர்பார்க்கலாம்..

தன்னை விரும்பாத கதாநாயகன் பின்னால் சுற்றும் வழக்கமான லூசுப்பெண்ணே கதாநாயகியாக காவியா தாப்பர், கொடுத்த வேலையை செய்துவிட்டுப் போகிறார்.. அடிக்கடி சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு புல்லட் ஓட்டினால் ராதிகா பெரிய ரவுடி என நம்பி விடுவோம் என சரண் எப்படி நம்பினார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.. ராதிகா வரும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய மைனஸ்..

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அம்மாவாக ரோகிணி வரும் காட்சிகள் மட்டும் நெகிழ வைக்கிறது. அப்பாவி இளைஞனாக வரும் விஹான் பரிதாபம் ஏற்படுத்துகிறார். இதுவரை வில்லனாகவே பார்த்துவந்த ஆதித்யா மேனன், இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் கொஞ்சம் காமெடியும் செய்து இருப்பது ஆச்சரியமான ஒன்று. சாம்ஸும் தன் பங்கிற்கு சமாளிக்கிறார்.. ஹரிஷ் பெராடிக்கு குறைவாக வேலை கொடுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.. நாசர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் வழக்கம் போல வந்து செல்கிறார்கள்..

சைமன் கே கிங்கின் இசையில் பாடல்கள் பெரிதாக நம் கவனத்தை ஈர்க்கவில்லை.. ரீமேக் படமான வசூல்ராஜா எம் பி பி எஸ் படம் மூலமாக வகைதொகையாக நம்மை காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்த இயக்குனர் சரண் தனது சொந்த சரக்கான மார்க்கெட் ராஜாவில் தானும் சிரமப்பட்டு ரசிகர்களையும் சிரமப்படுத்தியிருக்கிறார்..