எல்.கே.ஜி – விமர்சனம்

அரசியல் களத்தை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்துவிடும்.. அதிலும் காமெடி நடிகர் பாலாஜி தனது கைப்பட எழுதிய கதை வசனத்தை கொண்டு உருவாகியிருக்கும் படம் என்பதால் நிச்சயம் அரசியல் நையாண்டி குறைவிருக்காது என்கிற எண்ணத்தை இந்த படத்தின் ட்ரெய்லரே உருவாக்கிவிட்டது. இப்போது படம் வெளியாகி ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திப்படுத்தி இருக்கிறது பார்க்கலாம்.

அரசியலில் சோபிக்க முடியாதுபோன, நாஞ்சில் சம்பத்தின் மகன் ஆர்ஜே பாலாஜி தனது மாமா மயில்சாமியுடன் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு சிறுவயதிலேயே வார்டு கவுன்சிலராக பொறுப்பிற்கு வருகிறார்.. அடுத்தது எம்எல்ஏ, அமைச்சர் என படிப்படியாக வளரவேண்டுமென கனவு காணும் ஆர்ஜே.பாலாஜி இதற்காக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் உதவியை நாடுகிறார்.. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிரியா ஆனந்த், இவருக்கு சில திட்டங்கள் போட்டுக் கொடுக்கிறார்.. அதில் ஒன்று ஒர்க்அவுட்டாகி முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அமைச்சரின் கவனத்தை ஈர்க்கிறது

இந்த சமயத்தில் முதல்வர் மறைந்ததால் ஏற்படும் இடைத்தேர்தல் ஆர்ஜே.பாலாஜிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது ஆனால் அவருக்கு மிகப்பெரிய போட்டியாக நிற்கிறார் அதே கட்சியைச் சேர்ந்த அந்த தொகுதியின் செல்லப்பிள்ளையான ஜேகே.ரித்தீஷ் மிகவும் செல்வாக்குள்ள அவரை வீழ்த்துவதற்காக மீண்டும் தேர்தல் வியூகம் வகுக்கிறார் பிரியா ஆனந்த்.. தொகுதி செல்வாக்கு ஜெயித்ததா கார்ப்பரேட் நிறுவனத்தின் நரித்தனம் ஜெயித்ததா என்பது கிளைமாக்ஸ்.

இதுநாள் வரை சின்னதாக காமெடி ரோலில் வந்துபோகும் ஆர்.ஜே பாலாஜி மொத்தப்படத்திலும் வழக்கம்போல தன்னுடைய ஸ்டைலையில் அனைத்து கட்சியையும் கலாய்த்தெடுத்துள்ளார். படிப்படியாக தன்னை கவுன்சிலர் பதவியிலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும் அவரின் சாங்க்ய தந்திரம் பலே பலே.. அவருடைய நையாண்டி கலந்த நடிப்பு தான் படத்திற்கு பிளஸ்…

இதுவரை ப்ரியா ஆனந்த் நடித்த படங்களிலேயே அவருக்கு கிடைத்த சிறந்த கதாபாத்திரம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். கார்பரேட் நிறுவனத்தின் அதிகாரி எப்படியெல்லாம் இருப்பார் என்பதை படம் முழுவதும் நாயகனுக்கு சமமாக, இல்லையில்லை அவரை விட ஒரு படி மேலாக அசத்தலான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.

நீண்டநாளைக்கு பிறகு வந்தாலும் வலுவான மனதில் நிற்கும் கதாபாத்திரத்தில் ஜே.கே.ரித்தீஷ் கலக்குகிறார். குறிப்பாக அவருக்கான பில்டப் காட்சிகள் செம. இன்னொரு ராமராஜனை பார்த்தது போலவே உள்ளது. ஆர்.ஜே. பாலாஜியை எதிர்க்கும் கேரக்டர் என்றாலும் அதிலும் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜே.கே.ரித்தீஷ்.

30 வருட அரசியல் வாதியான நாஞ்சில் சம்பத் இந்த படத்தின் மூலம் தான் நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அதேசமயம் அரசியலிலும், பேச்சாற்றலிலும் திறமை வாய்ந்தவர் என பெயரெடுத்த நாஞ்சில் சம்பத்தின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். மயில்சாமிக்கு படம் முழுவதும் ஆர்.ஜே பாலாஜியுடன் இருக்கும் ஒரு முக்கிய கேரக்டர். அவரும் படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளார். நடிகர் திலகத்தின் மகன் ராம்குமாரும் நீண்டநாளைக்கு பிறகு தனது இருப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் கதைக்களம் என்றால் நாமே அதில் ஒரு கேரக்டராக இருப்பது போல உணரவேண்டும்.. அதை ஒளிப்பதிவாளர் வித்து அய்யனா திறம்பட செய்துள்ளனர். இசையும் படமும் ஒன்றி போகும் அளவிற்கு திறம்பட இசையமைத்துள்ளார் லியோன் ஜேம்ஸ்.

இன்றைய மீடியாக்களும் சோஷியல் மீடியாக்களும் நினைத்தால் குப்பையில் இருப்பவனை கோபுரத்திலும் கோபுரத்தில் இருப்பவனை குப்பையிலும் தூக்கி வீசிவிட முடியும் என்பதை காட்சிக்கு காட்சி அழகாக சவுக்கடியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் இருந்தாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களை கட்டி போட்டு விட்டார் இயக்குனர் கே.ஆர்.பிரபு.. கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலும் காலக்கியுள்ளனர் ஆர்.ஜே.பாலாஜியும். அவரது டீமும். காமெடி கலந்த கதை, சிந்திக்க வைக்கும் கிளைமாக்ஸ் படத்திற்கு பலம்.