“சிங்கத்துக்கு ஒரு குரல்.. சிவாஜிக்கு நூறு குரல்” – கட்டபொம்மன் விழாவில் வைரமுத்து புகழாரம்..!

“சிம்மக்குரலோன் என சிவாஜியை சொல்கிறீர்கள்.. ஆனால் அந்த சிங்கத்துக்கு ஒரு குரல் தான்.. ஆனால் சிவாஜிக்கோ நூறு குரல்.. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கர்ஜிக்கும் குரல் வேறு, ஊமைத்துரையின் மகளை கொஞ்சும் குரல் வேறு, தூக்கு கயிற்றை முத்தமிட்டு பேசும் குரல் வேறு என பல குரலுக்கு சொந்தக்காரர்.. நூறு சதவீதம் ஆண்குரலில் பேசிய தமிழ்க்குரலுக்கு ஒரே சொந்தக்காரர்” என புகழாரம் சூட்டினார் கவிப்பேரரசு வைரமுத்து.

இன்று நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் மேலும் பேசிய அவர், “சிவாஜியின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது உடல் அருகே அமர்ந்திருந்தபோது எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.. மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு ஜென்மம் முடிந்ததும் மறு ஜென்மம் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் இதோ இந்த சிவாஜி என்கிற கலைஞன் ஒரே உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர்” என்று பேசினார்.

விழாவில் ராம்குமார், பிரபு, கலைபுலி தாணு, சித்ரா லட்சுமணன், ஜெமினியின் சார்பாக அவரது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் உட்பட பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். இதில் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 116 முறை நடத்தி அதில் வந்த 3௦ லட்சம் ரூபாயை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தவர் சிவாஜி. இன்றைய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய்.. மற்றவர்களுக்கு கொடுப்பதை விளம்பரப்படுத்துவது அவருக்கு பிடிக்காததால் இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரியவில்லை” என அறிய தகவல் ஒன்றை கூறி ஆச்சர்யப்பட வைத்தார்