கோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்

Koditta-Idangalai-Nirappuga-Movie-review

கால் டாக்ஸி ட்ரைவரான பார்த்திபன் ரியல் எஸ்டேட் புரோக்கரும் கூட.. வெளிநாட்டில் இருந்துவரும் சாந்தனுவுக்கு கார் ஓட்ட செல்லும் பார்த்திபன், அவருக்கு நிலம் வாங்கும் ஆசை இருப்பது கண்டு தனக்கு தெரிந்த கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைக்கிறார்.. சமையலுக்கும் உதவிக்கும் தனது மனைவி பார்வதி நாயரை நியமிக்கிறார்…

பார்த்திபனுக்கும் பார்வதி நாயருக்குமான வயது வித்தியாசம், பார்வதியை அவர் மணந்த சூழல், தாம்பத்யத்தில் இயலாமை என ஒவ்வொரு விஷயமாக சாந்தனுவுக்கு தெரிய வருகிறது. கூடவே பார்வதிக்கு அடிக்கடி வரும் வலிப்புக்கான காரணமும் தெரிய வர அதிர்ச்சியாகிறார் சாந்தனு..

அந்தக்குறையை போக்க சாந்தனு எடுக்கும் வில்லங்க நடவடிக்கை என்ன, இளமை சொட்டும் மனைவியை ஒரு கட்டிளம் காளையுடன் (சு)தந்திரமாக பழகவிடும் பார்த்திபனின் திட்டம் தான் என்ன என இப்படி பல ‘என்ன’க்களுக்கு க்ளைமாக்ஸில் அதிரடி திருப்பத்துடன் கண்ணியமான விடை சொல்கிறார் பார்த்திபன்..

கொஞ்சம் வயதான கெட்டப் என்றாலும் காலை இழுத்து இழுத்து நடந்தாலும் பார்த்திபனிடம் நாம் காலம் காலமாக பார்த்துவரும் தனித்திறமையில் (பேச்சு தாங்க) எந்த மாற்றமும் இல்லை. நீதிபதியை எதிர் கேள்வி கேட்டு அதிரவைப்பதிலும், தனது இயலாமையை சாந்தனுவிடம் அப்பட்டமாக வெளிப்படுத்துவதிலும் கோடிட்ட சில இடங்களை தன் பங்கிற்கு நிரப்பி இருக்கிறார் பார்த்திபன்.

இது நாள்வரை நாம் பார்த்து வந்த சாந்தனு இதில் புதிய பரிணாமம் தொட்டுள்ளார். ஹைடெக் இளைஞனாக வரும் சாந்தனு, இளம் பார்வதியுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் சஞ்சலத்தையும் சரசத்தையும் சரிசமமாக வெளிப்படுத்தியுள்ளார். கட்டாயம் பாராட்டவேண்டிய விஷயம் அவரது டான்ஸ்.. பிச்சு உதறுகிறார்.

கேரளத்து சேச்சி பார்வதி நாயருக்கு, இந்தப்படத்தில் தன்னுடைய நடிப்பு முழுவதையும் (!) வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளார் பார்த்திபன். அவரும் ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து தனது கேரக்டரில் நடிப்பு ப்ளஸ் கிளாமர் இரண்டிலும் சேர்த்தே ஸ்கோர் செய்கிறார்.

‘நீ மென்பொருள் பொறியாளர்… மென்பொருளான பெண்ணை ஹேண்டில் பண்ணுவது ஈஸி” என மகனுக்கு கிளாஸ் எடுக்கும் ஹைடெக் அம்மாவாக வரும் சிம்ரன் நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை.. மறதிக்காரராக வரும் தம்பி ராமையாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையேயான காட்சிகளில் பார்த்திபனுக்கு ஏற்ற சரியான ஜோடியாக (காமெடியில் தான்) மாறியிருக்கிறார் தம்பி ராமையா. ட்ராவல்ஸ் ஓனராக வரும் சிங்கம்புலி வழக்கம்போல படபட சவுண்ட் பட்டாசு..

சத்யாவின் இசையில் டி.ஆர் பாடியிருக்கும் ‘டமுக்காட்லாம்’ பாடலை தவிர மற்றவை நம்மை மௌனமாகவே கடந்துபோகின்றன. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கும் கதைக்களத்துக்கும் ஏற்ற விதத்தில் காட்சிகளை வித்தியாசப்படுத்தி பயணிக்கிறது.

மனைவி விஷயத்தில் பார்த்திபனின் ‘தாராள’ மனமும் பார்வதி நாயரின் நடவடிக்கைகளும் அவ்வப்போது படம் பார்க்கும் நமக்கு ஏதோ வில்லங்கம் இருக்குடா என்கிற ரீதியில் ‘பகீர்’ கிளப்பவே செய்கின்றன. அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆடியன்ஸ் எதிர்பாராத ஒன்றுதான். நிச்சயமாக விடலை பையன்களையும் தம்பதிகளையும் டார்கெட் பண்ணி கதை பின்னியிருக்கும் பார்த்திபன், பெரும்பாலும் லட்சுமண கோட்டிற்கு அருகிலேயே காட்சிகளாலும் வசனங்களாலும் பயணிக்கிறார்.

இத்தனை வருடங்களிலும் தனது ட்ரேட் மார்க்கான வசனக்குறும்பை அவர் சிறிதளவும் கைவிடாதது தான் அவரது பலம்.. சில நேரங்களில் அதுவே அவரது படங்களுக்கு பலவீனமும் கூட.. இருந்தாலும் இந்தப்படத்தில் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் சங்கதிகளை சகல இடங்களிலும் தெளித்து, அதேசமயம் கலாச்சார கோடு தாண்டாமல் ஓரளவு கண்ணியமாகவே கோடிட்ட இடங்களை நிரப்பியிருக்கிறார் பார்த்திபன்.