கயல் – விமர்சனம்

 

யாருமற்ற அனாதைகள் ஆருணும் சாக்ரடீஸும்.. ஆறு மாதம் வேலை பார்ப்பார்கள், சம்பாதித்த பணத்தை வைத்து ஆறுமாதம் இந்தியாவெங்கும் பயணம் செய்வார்கள். அப்படி ஒரு முறை சுற்றிவிட்டு கன்னியாகுமரி போகும்போது, வழியில் உள்ள ஆரல்வாய்மொழி என்கிற ஊரில் இறங்குகிறார்கள்.

அதே சமயம் அந்த ஊர் ஜமீன்தாரின் பெண், தனது காதலனுடன் ஓடிப்போக ஏதேச்சையாக அங்குவரும் இவர்கள் தான் அதற்கு உதவினார்கள் என இருவரையும் கட்டிவைத்து அடிக்கிறார்கள். தன்னிடம் நிச்சியமாக பேசி உண்மையை வாங்கவரும், அங்கே வேலைபார்க்கும் வேலைக்கார பெண் கயலை பார்த்ததுமே ஆருணுக்கு காதல் பிறக்கிறது.

அதை பலபேர் முன்னிலையில் துணிச்சலாக வெளிப்படுத்தவும் செய்கிறார் ஆருண்.. ஓடிப்போன பெண் திரும்பிவர, உண்மை தெரிந்து ஆருணையும் சாக்ரடீஸையும் விடுவித்து எச்சரித்து ஊரைவிட்டு அனுப்புகிறார்கள்.. தனது காதலை தெரிவித்த திருப்தியுடன் கன்னியாகுமரி செல்கிறார் ஆருண்.

ஆனால் இங்கே கயலையும் காதல் தீ பற்றிக்கொள்கிறது. ஆருண் மீதான காதல் அவரை பாடாய்படுத்த, வீட்டைவிட்டு வெளியேறி, அவரைத்தேடி கன்னியாகுமாரி செல்கிறார். அதேசமயம் கயலை தேடி மீண்டும் அவள் ஊருக்கு வரும் ஆருணுக்கு அவள் தன்னை தேடிச்சென்ற விபரம் தெரிய வருகிறது.

மீண்டும் கன்னியாகுமரி வந்து சில பல இடைஞ்சல்களுக்குப்பின் ஒருவரை ஒருவர் தேடி கண்டுபிடிக்கும் அந்த நிமிடத்தில் தான் சுனாமி அரக்கனின் கோரப்பிடியில் சிக்குகிறார்கள்… காதலர்கள் பிழைத்தனரா..? காதல் பிழைத்ததா..? என்பது க்ளைமாக்ஸ்.

ஆருணாக புதுமுகம் சந்துரு.. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்கும் ஊர்சுற்றியாக சரியான தேர்வு. கதாபாத்திரத்திற்கேற்ற இயல்பான நடிப்பும் சரளமாக வெளிப்படுகிறது. பிரபுசாலமனின் ‘பிடிவாத காதலன்’ கதாபாத்திரத்திற்கு இவரும் உயிர் கொடுத்திருக்கிறார்.

கயல் போன்ற கவர்ந்திழுக்கும் கண்களாலேயே பல கதைகளை சொல்லிவிடும் கிராமத்து வெகுளிப்பெண் கயலாக நடித்திருக்கும் ஆனந்தி, காதலனை தேடி பரிதவிக்கும் காட்சிகளில் நம்மை கலங்கடித்து விடுகிறார். அந்த உதட்டோர மச்சம் அவருக்கு இன்னும் அழகூட்டுகிறது.

சந்துருவின் நண்பன் சாக்ரடீஸாக நடித்திருக்கும் புதுமுகம் வின்சென்ட் நமக்கு கிடைத்திருக்கும் இன்னொரு காமெடி வரவு. எங்கெங்கு இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சிரிப்பை வரவழைக்கிறார். அடுத்து குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் ஜமீன்தாரின் வலதுகையாக நடித்திருக்கும் பத்திரிகையாளரான ‘தினகரன்’ தேவராஜ் தான். இதற்கு முன் அவர் நடித்த படங்களை விட இந்தப்படத்தின் கதாபாத்திரத்தில் அவர் கச்சிதமாக பொருந்திப்போகிறார்.

ஆரம்ப காட்சியிலேயே தொழிலதிபராக சில நொடிகளே வந்துபோகும் பிரபு, மகள் ஓடிப்போனாலும் கோபத்தில் நிதானம் தவறாமல் விசாரிக்கும் கிராமத்து ஜமீன்தார், லோடலோடவென பேசும் அவரது அந்தக்கால ஜமீன் சித்தப்பா, போலீஸ்காரராக நடித்திருக்கும் ஜேக்கப் உட்பட கதாபாத்திரங்களில்ன் தேர்வில் எந்தக்குறையும் வைக்கவில்லை பிரபு சாலமன்..

படத்தின் மிகப்பெரிய பலம், கதையுடன் நம்மை இணைந்து பயனிக்கவைக்கும் டி.இமானின் பின்னணி இசையும், அவ்வப்போது நம்மை ஆசுவாசப்படுத்தும் பாடல்களும் தான். ‘பறவையா பறக்கிறோம், என் ஆளை பார்க்கப்போறேன்’ ஆகிய பாடல்கள் இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிடுகின்றன. பயணம் சார்ந்த கதைக்கு ஒளிப்பதிவு எவ்வளவு முக்கியம் என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்திக்கொண்டே இருக்கிறது வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு..

அதேபோல சுனாமி பேரலை பொங்கிவரும் கடைசிக்காட்சியில் அதன் கோரதாண்டவத்தை பத்து வருடம் கழிந்த பின்னரும் கூட அப்படியே நம் கண்முண்ணே அப்படியே கொண்டுவந்து நிறுத்தியதில் ஆர்ட் டைரக்டர் வைரபாலனின் கடின உழைப்பு பளிச்சென தெரிகிறது. அதற்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து தருவோம்.

வழக்கம் போல மனதை பிசையும் ஒரு காதலையும் அதன் வலியையும் நமக்கு தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன்.. அதற்கு லைவான விஷயமாக சுனாமியை கையில் எடுத்து கதை பின்னியிருக்கிறார். மனதை வருடும், போரடிக்கிறதா காதல் கதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்..

அதேசமயம் கதாநாயகன் கயல் மீதான தனது காதலை சொல்லும்போது, வெளிப்படுத்தும் காதலை, அவளைப்பார்க்கும்போதே தனது முகபாவங்களிலும் காண்பித்திருந்தால், அவனது தந்தை சொன்ன அந்த ‘காதல் வெளிச்சம்’ இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

ஒரே நாளில் சில நிமிடங்கள் மட்டும் தன்னை பார்த்த ஒருவன் உடனே காதலிப்பதாக சொல்வதை அந்த காதலி ஏற்றுக்கொள்வதைக்கூட நாம் சரி என்று சொன்னாலும், அனாதையான அந்த பெண்ணை வளர்த்த கிராமத்து பாட்டி, வெளியுலகம் அறியாத பெண்ணை எந்த நம்பிக்கையில் அவனை தேடிச்செல்ல வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறாள் என்பது தான் படம் பார்த்து முடிந்து வந்தபின்னரும் நம் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி.