கங்காரு – விமர்சனம்

தங்கையை கண்ணின் இமைபோல பாதுகாக்கும் முரட்டு அண்ணன் அர்ஜுனா. இருந்தாலும் தனது தங்கை பிரியங்கா விரும்பியவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்யும் நேரத்தில், காதலன் மர்மமாக இறக்கிறான். இவர்களது வளர்ப்பு தந்தையான தம்பி ராமையா ஒரு மாப்பிள்ளையை பேசி முடிக்கிறார். அவனும் திருமணத்திற்கு முன்னரே கரண்ட் ஷாக் அடித்து மரணமடைகிறான்.

அண்ணன் தங்கை இருவருக்கும் இந்த நிகழ்வுகளால் மனம் பாதிக்காமல் இருக்க, தனது இடத்திற்கு அழைத்து செல்கிறார். இவர்களது நலம் விரும்பியான ஆர்.சுந்தர்ராஜன். அங்கே ஏற்கனவே திருமணமாகி, மனைவியை இழந்த நல்ல பையனான சுரேஷ் காமாட்சியை பிரியங்காவுக்கு அவரே திருமணமும் செய்து வைக்கிறார்.

ஆனால் திருமணம் நடந்தபின்னும் மாப்பிள்ளையை விபத்து ஏற்படுத்தி கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறார் சுரேஷ் காமாட்சி. ஆவேசத்துடன் இதற்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்புகிறார் அண்ணன். ஆனால் போலீஸ் விசாரணையில் இந்த கொலைகளை செய்தது யார் என்கிற திடுக்கிடும் தகவல் தெரியவருகிறது. இறுதியில் வெளிப்படும் உண்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

கங்காரு கேரக்டரில் முரட்டுத்தனமாக பாசம் காட்டும் அர்ஜுனா பொருத்தமான தேர்வு. படம் முழுவதும் சிரிக்காமலேயே நடித்திருப்பது ஆச்சர்யம். தங்கையாக வரும் பிரியங்காவுக்கு நடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அதை அவரும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக வந்து, தன்னை கண்டுகொள்ளாத அர்ஜுனாவை விரட்டி விரட்டி காதலிக்கும் வர்ஷா அஸ்வதி கவர்ச்சி காட்சிகளில் தேறுகிறார். தம்பி ராமையா, ஆர்.சுந்தர்ராஜன் இருவரும் கதையுடன் சேர்ந்து பயணிப்பது கதாநாயகன் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆசுவாசம் தருகிறது… கலாபவன் மணி காமெடி கலந்த வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.

ஸ்ரீனிவாஸின் இசையில் பாடல்கள் ஓரளவு ரசிக்கும்படியே இருக்கின்றன. கேமராமேன் ராஜரத்தினம் கொடைக்கானலை ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்கிற கண்ணோட்டத்தில் காட்டாமல், அங்கே வாழும் மக்களின் சூழ்நிலைக்கேற்ப யதார்த்தமாக காட்டியிருகிறார்.

அரதப்பழசான கதை, பல முறை பார்த்து சலித்த அண்ணன் தங்கை பாசம் என்றாலும், தனது முந்தைய படங்களின் மூலம் அவப்பெயரை சந்தித்த இயக்குனர் சாமி, இந்தமுறை அந்த மாதிரி சர்ச்சைக்குரிய விஷயங்களை தொடவில்லை என்பது ஆறுதல்.

என்றாலும், வழக்கம்போல தனது பாணியில் அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்துடன் ஒரு பகிரங்க உண்மையையும் உடைத்துள்ளார். அதை லாஜிக்குடன் சொல்வதில் அவர் மயிரிழையில் தப்பித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.