“காஜல் அகர்வால் என் பையனுடன் நடிக்கவேண்டும் என நினைத்தேன்” – விஷாலின் தந்தை கலாட்டா..!

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘பாயும் புலி’ பாய்வதற்கு தயாராகிவிட்டது. அதன் முன்னோட்டம் தான் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி. காஜல் அகர்வால், சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற இந்த விழாவில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் துவக்கத்தில் மறைந்த மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்களின் திருவுருப்படத்தை பாரிவேந்தர் திறந்து வைக்க, வைரமுத்து உருக்கமான கவிதை வாசிக்க மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவை ‘கும்கி’ புகழ் நடிகர் ஜோ மல்லூரி தொகுத்து வழங்கி கலகலப்பாக்கினார்.

இந்த விழாவில் வேந்தர் மூவிஸ் சார்பாக இயக்குனர் சுசீந்திரனுக்கு ‘தயாரிப்பாளர்களின் இயக்குனர்’ என்கிற விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய வைரமுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விஜய், அஜீத், சூர்யா எல்லோரும் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றார்.

அனைவரையும் விட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேசியதுதான் விழாவுக்கு வந்தவர்களை கலகலப்பாக்கியது. “இன்னும் என் பையனுடன் காஜல் அகர்வால் நடிக்கவே இல்லையே.. கூடிய சீக்கிரம் நடிச்சுரனும்னு நினைத்தேன்.. இந்தப்படத்துல அது நடந்துருச்சு. அதே மாதிரி எல்லா முன்னணி ஹீரோயின் கூடவும் விஷால் நடிக்கனும்னு கேட்டுக்குறேன்” என்றாரே பார்க்கலாம், விஷாலுக்கும் காஜலுக்கும் வெட்கம் தாங்கவில்லை.

இந்தப்படம் வரும் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.