காப்பான் – விமர்சனம்

கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே கமர்ஷியல் பார்முலாவில் ரசிகர்களை கவரும் விதமாக உருவாகி இருக்கும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இந்த முறை சூர்யா, மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி என வலுவான கூட்டணியுடன் காப்பான் படத்தை இயகியுள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்தப்படம் எப்படி இருக்கிறது../ பார்க்கலாம்..

மோகன்லால் நாட்டின் பிரதமர். அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். பிரதமரை கொல்ல சதித்திட்டம் நடக்கின்றது. இதில் நாயகன் சூர்யாவும் சில சதிவேலைகளை செய்கிறார். ஆனால் அவர் செய்யும் நாசவேலைகள் அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து பிரதமர் மோகன்லாலை காப்பதற்காகவே.

இதனால் இராணுவத்தில் இண்டலிஜன்ஸ் பிரிவில் பணியாற்றும் சூர்யாவை பாராட்டி தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார் மோகன்லால்.

ஆனால் ஒரு கட்டத்தில் பிரதமர் மோகன்லால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட, மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கும் சூர்யாவே பாதுகாப்பு அதிகாரியாக தொடர்கிறார். ஆர்யாவைக் கொல்லவும் சதிவேலைகள் நடக்கிறது.

இறுதியில் மோகன்லாலை கொன்றது யார்? ஆர்யாவை கொல்ல துடிப்பது யார்? என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.

சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் விவசாயி என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்.

இரயில் சண்டை காட்சியில் மிரட்டியிருக்கிறார். ஸ்ண்ட் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு மிரட்டல்.

மோகன்லால் பிரதமராக கனகச்சிதம். அவரின் வசனங்களுக்கு ரசிகர்களிடையே கைதட்டல் பறக்கிறது.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பு திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்கிறது.

மொத்தத்தில் காப்பான் சூர்யாவிற்கு மற்றுமொரு மெகாஹிட் படமாக அமையும் என்பதில் ஐயமில்லை.