போகன் பின்னணி இசையில் வித்தியாசம் காட்டியுள்ள இமான்..!

D.Imman_

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துள்ள ‘போகன்’ திரைப்படம் நாளை மறுதினம் (பிப்-2) வெளியாகின்றது. ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் போகன் திரைப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு டி.இமானின் இசை மிக பெரிய பலம் என்கிறார்கள் படத்தின் இறுதி அவுட்புட்டை பார்த்த படக்குழுவினர். ஏற்கனவே ‘போகன்’ படத்திற்காக இவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இமான் என்ன சொல்கிறார்..?

“இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறேன் என்று சொல்வதை விட, எங்கள் கூட்டணியோடு மீண்டும் இணைந்து இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். எங்களின் கூட்டணியில் தற்போது அரவிந்த்சாமியும் இணைந்து இருப்பது மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்ற புதுவிதமான கானா பாடலான ‘டண்டணக்கா’ பாடலை போல இந்த படத்திலும் இருக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ் திரையுலகின் நடிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக ‘டமாலு டுமீலு’ பாடலை உருவாக்கினோம்.

இந்த பாடலுக்கு தன்னுடைய குரலால் மேலும் சிறப்பு சேர்த்து இருக்கிறார் அனிருத். ‘போகன்’ படம் இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருப்பதால், பிண்ணனி இசையில் நான் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றேன்..” என்று உற்சாகமாக கூறுகிறார் இசையமைப்பாளர் டி.இமான்.