“உண்மையில் நான்தான் சிவாஜியின் மூத்த மகன்” – சிவகுமார் பெருமிதம்..!

 

1959ள் வெளியான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜியின் நடிப்பு இன்றளவும் கட்டபொம்மன் என்ற மாவீரன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று எண்ணும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டெக்னி கலர் படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசூலில் சக்கை போடு போட்டதுடன், நடிகர் திலகத்திற்கு ஆசிய – ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது.

தற்போது இந்தப்படம் டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகுமார் பேசும்போது சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மற்றும் ‘கந்தன் கருணை’ ஆகிய படங்களின் வசனங்களை சிவாஜியின் குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசியபோது, சிவாஜி அவர் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

மேலும் அவர் பேசும்போது, “மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் ஆரம்பித்து ‘பசும்பொன்’ வரை 15 படங்களில் சிவாஜியுடன் நடித்துள்ளேன்.. இங்கிருப்பவர்களில் என்னை தவிர இந்தப்பெருமை யாருக்கும் கிடையாது.. ராம்குமார், பிரபு எல்லாம் அப்புறம் வந்தவர்கள் தான்.. சொல்லப்போனால் நான்தான் சிவாஜியின் மூத்தமகன்” என்று கூற, அதைக்கேட்டதும்  ராம்குமார், பிரபுவின் முகத்தில் அவ்வளவு பெருமிதம். வந்திருந்த சிவாஜி ரசிகர்களின் கரகோஷமோ அரங்கை அதிரவைத்தது.