ஐ – விமர்சனம்

 

லஞ்ச ஊழல், அரசு எந்திரம் ஆகியவற்றை விடுத்து இந்தமுறை மாடலிங் உலகில் நுழைந்து டெக்னாலஜியை பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் ஷங்கர்..

மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வாங்கிவிட்டு, மிஸ்டர் இந்தியாவாக துடிக்கும் ஆணழகன் விக்ரம்.. அவரது ஆதர்ஷ மாடலிங் நாயகி எமி ஜாக்சன் மூலமாக மாடலிங் உலகில் நுழையும் வாய்ப்பும், கூடவே எமியின் காதலும் கைகூடுகிறது. அதேபோல இவரது வளர்ச்சி பிடிக்காத எதிரிகளும் ஒன்று கூடுகிறார்கள்.. அவர்கள் விக்ரமிற்கு அநீதி இழைக்க, அதற்கு விக்ரம் திருப்பித்தந்தது என்ன என்பதுதான் ‘ஐ’யோடா என அசரவைக்கும் ‘ஐ’ படத்தின் கதை.

கட்டழகன், கூன் விழுந்த குரூபி, ஓநாய் மனிதன் என வெவேறு வேடங்களில் படம் நெடுகிலும் விக்ரமின் நடிப்பும், ஒவ்வொரு கேரக்டருக்காக அவர் மெனக்கெட்டிருக்கும் விதமும் நம்மை பிரமிப்பில் இருந்து நகரவிடாமல் செய்கிறது. நன்றாக உழைத்திருக்கிறார் என சாதாரணமாக இரண்டு வார்த்தைகளில் அதை அடக்கிவிடமுடியாது.

மாடலிங் பெண் கதாபாத்திரம் என்பதாலேயே எமி ஜாக்சனுக்கு அது கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறது. நடைமுறையில் சாத்தியமா என தெரியாவிட்டாலும், கடைசி காட்சியில் காதலுக்கு மரியாதை செய்து கைதட்டல் பெறுகிறார்.

டாக்டராக சுரேஷ்கோபி ஆரம்பத்திலிருந்து அடக்கி வாசிக்கும்போதே அவரது கேரக்டரின் ஆழம் நமக்கு புரிந்துவிடுகிறது. அதற்கேற்ற நடிப்பை கொடுத்திருந்தாலும் அவரை வில்லனாக பார்க்க கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது. அவரது கேரக்டர் இன்றும் சமூகத்தில் மனித உருவில் உலாவும் சில ‘நரி’களை பிரதிபலிப்பது உண்மை..

சீரியஸ் திருடனாக செல்லும் படத்திற்கு சிரிப்பு போலீஸாக வந்து ட்ரீட்மென்ட் கொடுக்கிறார் சந்தானம். போதாதற்கு பவர்ஸ்டார் வேறு இந்தப்படத்திலும் வசமாக சிக்கிக்கொள்ள, சந்தானத்தின் வாயால் வசை வாங்காதவர்கள் பாக்கியவான்கள் எனும் அளவுக்கு சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுகிறார்.

மாடலிங் தாதாவாக பிரபுவின் அண்ணன் ராம்குமார் ஆச்சர்யம் தர, மாடலிங் வில்லனாக கச்சிதமாக வில்லத்தனம் காட்டுகிறார் உபன் படேல்.. எமியின் உதவியாளராக திருநங்கை கதாபாத்திரமும் சரியான தேர்வே..

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடலுக்கு தியேட்டரில் விசிலடித்து ஆட்டம் போடுகிறார்கள். ஒரு பாடலுக்கு அமைதியாக இருந்துவிட்டு, இன்னொரு பாடலை மினி இடைவேளையாக மாற்றிக்கொள்கிறார்கள். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் போய் வந்த உணர்வு ஏற்படுகிறது.

ஷங்கரின் முந்தைய படங்கள் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, கதையிலும் பிரமாண்டம் காட்டியிருக்கும்.. குறிப்பாக சமூகத்தின் அவலங்களை தோலுரிப்பதாக இருக்கும்.. இந்தப்படத்தில் பிரமாண்டம் இருக்கிறது.. காட்சிக்கு காட்சி நம்மை டெக்னிக்கலாக அசத்தவும் செய்கிறார்.

ஆனால் ஷங்கரின் முந்தைய படங்களை மனதில் வைத்துக்கொண்டு செல்பவர்களுக்கு இந்தப்படத்தின் கதை சற்று ஏமாற்றம் அளிக்ககூடும்.. அதேபோல முதல் பகுதியில் சீனாவில் விக்ரம்-எமிக்கான காதல் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி வைத்திருக்கலாம்.

உள்ளூரில் நூற்றுக்கணக்கான ஜிம் பாய்ஸ்களுடன் விக்ரம் மோதுவது கூட ஒகே.. ஆனால் சீனாவில் வித்தை கற்ற வீரர்களிடம் விக்ரம் அந்தரத்தில் சரிக்கு சரியாக மோதுவது சாகசம் தான் என்றாலும் சரியான ‘அந்நிய’த்தனம்.. மணக்கோலத்தில் எமியை கடத்தியபின், விக்ரம் வில்லன்கள் அனைவரையும் பழிவாங்கும் காலக்கெடு எவ்வளவு என்பதும் குழப்பம் தருகிறது.

இருந்தாலும் விக்ரமின் உழைப்பிற்காகவும் ஷங்கர் காட்டியிருக்கும் டெக்னிக்கல் பிரமாண்டத்திற்காகவும் இந்தப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்.