ஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிக அளவு படங்களுக்கு நடன வடிவமைப்பு செய்து வருகிறார். நடன இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவதும் இயக்குனர்களாக மாறுவதும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல.. அந்தவகையில் தற்போது துல்கர் சல்மான் படத்தை இயக்குவதன் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார் பிருந்தா மாஸ்டர்

இந்தப்படத்திற்கு ஹே ஷ்னாமிகா என டைட்டில் வைக்க்கப்பட்டுள்ளது. இது மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணியில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் முதல் வரி ஆகும். அந்தவகையில் துல்கர் பாடலையே அவர் படத்திற்கு டைட்டிலாக பயன்படுத்தியுள்ளார் பிருந்தா. ஏற்கனவே மலையாளத்தில் துல்கர் நடித்த ஒரு யமன்டன் பிரேமகதா என்கிற படத்திலும் ஒரு விளம்பரப் படத்திலும் துல்கருடன் இணைந்து பிருந்தா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

இந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி இருவரும் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கான துவக்கவிழா பூஜை மணிரத்னம், சுகாசினி உள்ளிட்ட பலர் முன்னிலையில் நடைபெற்றது. .