ஹர ஹர மஹாதேவகி – விமர்சனம்

hara hara mahadevaki review 1

கௌதம் கார்த்திக் நடித்துள்ள, அடல்ட்ஸ் ஒன்லி வகையை சேர்ந்த காமெடிப்படம் தான் இந்த ‘ஹர ஹர மஹாதேவகி’.

கௌதம் கார்த்திக்கை ஏடாகூடமான போஸில் மூன்றுமுறை பார்க்கிறார் நிக்கி கல்ராணி.. அதன்பின் இருவருக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. பின்னர் சில காரணங்களால் அந்த காதல் பிரேக்கப் ஆகிறது. அதனால் காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட பரிசு பொருட்களை பரஸ்பரம் ஒப்படைக்க முடிவு செய்து, ரிசார்ட் ஒன்றுக்கு வருகிறார் நிக்கி கல்ராணி. கௌதம் கார்த்திக்கையும் வரச்சொல்கிறார்.

அதேசமயம் அரசியல்வாதியான ரவிமரியா, எலெக்சன் கூட்டத்தில் குண்டுவைக்க திட்டமிடுகிறார். அந்த வேலையை முடிக்க, குண்டு பொருத்தப்பட்ட பேக்கை தனது உதவியாளர் நமோ நாராயணன் மூலமாக மொட்ட ராஜேந்திரன்-கருணாகரன் அன் கோவிடம் ஒப்படைக்கிறார். அதே மாதிரியான பேக் ஏற்கனவே வாக்களார்களுக்கும் பரிசுப்பொருளாக தரப்பட்டிருந்ததால், காதலியின் பொருட்களை எடுத்துச்செல்லும் கௌதம் கார்த்திக், மற்றும் கள்ள நோட்டுக்களை மாற்றும் பாலசரவணன் உள்ளிட்ட பலரிடமும் புழக்கத்தில் இருக்கிறது.

இங்கே ரிசார்ட்டில் சிறுமியை கடத்தும் லிங்கா, அவளை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் பணயமாக கேட்கிறார். அந்த பணயத்தொகையும் அதேபோல பேக்கில் அடைக்கப்பட்டு எடுத்துவரப்படுகிறது. ஆக, இந்த பேக்குகள் அனைத்தும் ரிசார்ட்டுக்குள் ஒவ்வொருவரிடமாக கைமாறி ஏற்படுத்தும் குழப்பம் தான் மீதிக்கதை..

இதில் கௌதம் கார்த்திக்-நிக்கி காதல் பிரேக்க ஆனதா..? இல்லை மீண்டும் இணைந்ததா..? சிறுமி காப்பற்றப்பட்டாளா, மந்திரியின் திட்டப்படி குண்டு வெடித்ததா என்பது க்ளைமாக்ஸ்.

மேலே சொன்ன விஷயங்களை வைத்து பார்க்கும்போதே காமெடிக்கான ஸ்கோப் அதிகம் இருப்பதாக தெரிகிறதல்லவா..? இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வரவேண்டாம், அப்படியே அப்பா, அம்மாவுடன் வந்தாலும் காதுகளை பொத்திக்கொள்ளுங்கள் (இல்லையென்றால் சந்தேகம் கேட்டு துளைத்தெடுத்து சங்கடத்தில் நெளிய வைப்பார்கள்) என்று சொல்லும் விதமாக டபுள் மீனிங்… இல்லையில்லை சிங்கிள் மீனிங் வசனங்களை கேப் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நுழைத்துள்ளார்கள்.

கௌதம் கார்த்திக் மட்டுமல்ல, நாயகி நிக்கி கல்ராணி, மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, அவ்வளவு ஏன் அவரது சம்சாரம் கூட சந்தடி சாக்கில் ‘ஏ’ கிளாஸ் வசனங்களை எடுத்துவிட்டு அப்ளாஸ் வாங்குகிறார்கள்.. படத்தின் முதல் பத்து நிமிடங்கள் மட்டும் என்னடா இப்படி வசனங்களையும் காட்சிகளையும் வைத்துள்ளார்களே என எரிச்சலுடன் நெளிய வைத்தாலும், அதன்பின் நம்மையறியாமல் அந்த காம(நெ)டிக்குள் இழுத்து சென்று விடுகிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்..

அதிலும் கௌதம் கார்த்திக்கின் ‘கடவுளே கடவுளே’ சமாச்சாரம், பிரேக் அப் பண்ணுவதற்காக ஒருவர் கொடுத்த முத்தங்களை இன்னொருவருக்கு தருவதற்காக சதீஷையும் நிக்கியின் தோழியையும் பயன்படுத்துவது எல்லாமே கிளுகிளுப்பு ப்ளஸ் காமெடி ரகம்.. இடையிடையே பாலசரவணனின் ஏடிஎம் திருவிளையாடல்கள், குழந்தை கடத்தல் லிங்கா, துப்பறியும் போலீஸ் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரையும் இணைத்து காமெடி களேபரமாக்கி இருக்கிறார்கள்.

ஆபாசம், அய்யோ, ச்சீ என கமேன்ட்டுகளுடன் ஒதுக்கும் அளவுக்கு இந்தப்படத்தில் பெரிய குற்றங்கள் இருப்பதாக தெரியவில்லை.. ஏற்கனவே அவர்கள் விளம்பரத்திலே சொன்னதுபோல இந்த ‘ஹர ஹர மஹாதேவகி’ 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உற்சாகம் தரும் பொழுதுபோக்கு படம் என்பதில் சந்தேகமே இல்லை..