பிந்து மாதவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

bindu-madhavi-1

தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் சின்ன சில்க் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி பிந்துமாதவி. ஆனால் இந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது எனும்படியாக பிந்துமாதவியை திரும்பி பார்க்கவைத்தது அடுத்ததாக வெளியான ‘கழுகு’ படத்தில் அவரது இயல்பான நடிப்பு. படத்தில் அவர் நடித்ததைவிட அவரது கண்கள்தான் அதிகம் பேசியது.

தொடர்ந்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்குராஜா’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என வரிசையாக வந்த படங்கள் பிந்துமாதவியின் நடிப்பை மெருகேற்றி இருப்பதுடன் தமிழ்சினிமாவில் அவருக்கு முக்கியமான இடத்தையும் தந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதவிர சமீபகாலமாக தனது எதார்த்தமான நகைச்சுவையான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய பிந்துமாதவி, தொடர்ந்து, ‘சவாலே சமாளி’ காமெடியிலும் பாண்டிராஜ் இயக்கிய ‘ஹைக்கூ’ படத்தில் குணச்சித்திர நடிப்பிலும் வித்தியாசம் காட்டினார். அடுத்ததாக சிபிராஜுடன் இவர் இணைந்து நடித்துள்ள ஹாரர் படமான ‘ஜாக்சன் துரை’ வரும் ஜூலை-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இப்படி நிதானமாக, அதேசமயம் கவனமாக வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைத்து முன்னேறிவரும் பிந்துமாதவிக்கு இன்று பிறந்தநாள். தமிழ்சினிமாவில் இன்னும் சில சாதனைகளை நோக்கி பிந்து மாதவியின் பயணம் அமையட்டும் என அவரது பிறந்த நாளான இன்று நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.