இரு வித யூகங்களை கிளப்பும் ‘போகன்’..!

ஒரு பக்கம் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பில் முக்கால்வாசி பங்கு ஜெயம்ரவி-அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘போகன்’ படத்துக்கும் இருக்கவே செய்கிறது.. காரணம் தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைந்துள்ளது மட்டுமல்லாமல், படத்தின் கதையும் ஆள் மாறாட்டம் என்கிற பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது..

ஆள் மாறாட்டம் என்றால் சாதரணமாக அல்ல… ஹாலிவுட்டில் ‘பேஸ் ஆப்’ என ஒரு படம் வந்தது தெரியும் தானே.. வில்லனை பிடிப்பதற்காக அவனைப்போலவே முகமாற்று சிகிச்சை செய்து கொள்வார் ஹீரோ.. இதை தெரிந்துகொண்டு ஹீரோவிடம் இருந்து தப்பிக்க ஹீரோ போல முகமாற்றம் செய்துகொள்வான் வில்லன்.. அந்த பாணியில் இந்தப்படத்தில் ஜெயம் ரவியும் அரவிந்த்சாமியும் பயங்கர அட்டகாசம் பண்ணுகிறார்கள் என சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் இல்லை.. இது கூடுவிட்டு கூடு பாய்கிற கதை.. அரவிந்த்சாமி உடலுக்குள் ஜெயம் ரவியும், இவர் உடலுக்குள் அவரும் புகுந்துகொள்வார்கள்.. இப்போது அரவிந்த்சாமியின் மேனரிசங்களை ஜெயம் ரவியும் இவரது மேனரிசங்களை அவரும் வெளிப்படுத்துவார்கள்.. பார்ப்பதற்கு செம த்ரில்லிங் மற்றும் காமெடியாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது..

ஆனால் இது ரெண்டிலும் சேராத புது மாதிரியான கதை இது என்றுதான் படக்குழுவினர் மத்தியில் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி இன்னும் சின்ன விஷயத்தை கூட இயக்குனர் லட்சுமண் கசியவிடவில்லை.. ஆனால் அவரது முந்தைய படமான ரோமியோ ஜூலியட்’டின் வெற்றியை விட இதில் இரண்டு மடங்கு சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இரவு பகலாக பணியாற்றி வருகிறார் மனிதர்.

எது எப்படியோ, மேற்கூறிய இரண்டு கதைகளின் படி இருந்தாலும் படத்தில் சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது… இல்லை இதை தாண்டி புதிதாக ஒரு ஏரியாவில் கதை சொன்னார்கள் என்றாலும் ரசிகர்களுக்கு அதுவும் விருந்து தான்.. வரும் பிப்-2 ஆம் தேதி இதற்கு விடை கிடைத்துவிடும்.