“இதுவரை பரபரப்புக்காகவே படங்களை இயக்கினேன்” –இயக்குனர் சாமி ஒப்புதல்

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைகுரிய படங்களின் மூலம் பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் இயக்குனர் சாமியை விடாமல் துரத்தி வருகிறது. சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற முத்திரையும் அவர்மேல் குத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கியுள்ள படம் தான் ‘கங்காரு’. இதன்மூலம் “நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’. எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி.

”நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கே நிலைமை இல்லை.யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கிவிட வேண்டாம். இந்த கெட்டபெயரை மாற்றவேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன் மூலம் என் மேல் படிந்துள்ள கெட்ட பெயரை மாற்றுவேன்” என்கிறார் சாமி..

இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனா ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக சாமியால் டெஸ்ட் செய்யப்பட்டவர்தான். ஆனால் அதில் ஆதியை நடிக்க வைத்தார். தற்போது இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளார்.. இவரது தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். மற்றும் வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன் என முக்கிய நடிகர்களும் கதையோட்டத்துடன் பயணிக்க இருக்கிறார்கள் என்கிறார் சாமி. பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

அண்ணன் தங்கை பாசமெல்லாம் காலம் கடந்தது விட்டதே என்றால், “நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன. ‘கங்காரு’ நவீன பாசமலர்… நிச்சயம் இது பேசப்படும்” என்கிறார் சாமி உறுதியாக.