என்னமோ நடக்குது – விமர்சனம்

இரண்டு தாதாக்களின் மோதலுக்கு இடையில் சிக்கிக்கொண்டு, பின் சிறுத்தையாய் சீறும் இளைஞனின் பாய்ச்சல் தான் ‘என்னமோ நடக்குது’. சம்மர் லீவுக்கு ஏற்றமாதிரி வந்திருக்கும் பரபர ஆக்‌ஷன் த்ரில்லர்..

போஸ்டர் ஒட்டும் வாலிபனான விஜய் வசந்த்துக்கு மஹிமா மேல் காதல்.. மஹிமாவுக்கு வெளிநாட்டு படிப்புக்காக நமோ நாராயணனிடம் வாங்கிய அஞ்சு லட்சத்தை கட்டவேண்டியாக சூழ்நிலை. இந்தப்பணத்திற்காக ரகுமானின் லாயரான தம்பிராமையா கொடுக்கும் பலகோடி ரூபாய் பணத்தை கைமாற்றும் வேலையை செய்ய ஒப்புக்கொள்கிறார் விஜய் வசந்த்.

ஆனால் அவரிடமிருந்து திட்டமிட்டு ஒரு கும்பல் பணத்தை பறிக்கிறது. இந்தப்பக்கம் ரகுமான் ஆட்கள் துரத்த, அந்தப்பக்கம் வட்டிக்கடைக்காரன் துரத்த ஹீரோ ஹீரோயின் இருவரும் ஓட்டம்.. ஓட்டம்.. நிற்காத ஓட்டம் ஓடுகிறார்கள். பணத்தை அடித்து மாற்றியது யார், எதற்காக அதை செய்தார்கள் எனபதை விஜய் வசந்த் கண்டுபிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

அட நம்ம சென்னை-28 விஜய் வசந்தா இது.? ஆள் அப்படியே வடசென்னை ஏரியாக்காரராகவே மாறிப்போய்விட்டார். அம்மாவை அடித்துமிதிக்கும்போதும், காதலியிடம் அறைவாங்கும்போதும் பாஷை, தெனாவெட்டு, பாடி லாங்க்வேஜ் என அனைத்திலும் அவ்வளவு நேர்த்தி. இதேபோல சரியான படங்களை தேர்வு செய்தால் விஜய்வசந்துக்கு இனி ஏறுமுகம் தான்.

ஹீரோயின் மஹிமா சோ க்யூட்.. கூட்டல் குறைத்தல் சொல்லமுடியாத அழகி. அதேபோல நடிப்பிலும்.. இவரது கேரக்டரை அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.

ரகுமானும் பிரபுவும் படத்தின் இரண்டு தூண்கள்… அரசியல்வாதி கம் தாதா கேரக்டர் என்றால் தான் ரகுமானுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஆயிற்றே.. ஊதித்தள்ளுகிறார். அதிலும் பாக்ஸராக வரும் பிரபு இடைவேளைக்கு பின வந்தாலும் கம்பீரமாக ஜொலிக்கிறார்.

மகன்களுக்கு நல்ல காதலி அமைவதை பார்த்தும் சந்தோஷப்படும் அம்மா வேடத்தில் சரண்யாவுக்கு இது பத்தாவது படம் என்று சொல்ல்லாம். ஆனால் வடசென்னை பாஷையில் அசத்துவதோடு மகனிடம் அடியும் மிதியும் வாங்கும் காட்சிகளில் யதார்த்தமாக பளிச்சிடுகிறார். அதிலும் ‘அடுத்த தடவை அடிச்சா மட்டன் பிரியாணிதான் வாங்கிட்டு வரணும்’ என மகனிடம் சொல்லும் ஒரு காட்சிபோதும்.

சுகன்யா.. வெல்கம்யா.. ஜெண்டில் வில்லியாக அலட்டல் இல்லாத நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரகுமானுக்கு கையாளாக வரும் தம்பி ராமையா டீசண்ட்டான வில்லத்தனம் மற்றும் காமெடிக்கு உத்தரவாதம் தர, ‘கும்கி’ அஸ்வினும் தன் பங்கிற்கு விஜய் வசந்த்தின் நண்பனாக வந்து பிரமாதப்படுத்துகிறார்.

பிரேம்ஜி இசையில் பாடல்களை விட பின்னணி இசை முந்துகிறது. சேசிங் காட்சிகளில் சென்னையை புரட்டிப்போடுகிறது ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு. தொய்வில்லாமல், நேரத்தை வீணடிக்காமல், விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய ராஜபாண்டி கவனிக்கத்தக்க இயக்குனர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்.