தர்பார் – விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது 167வது படமான தர்பார் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இருபத்தி எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, இந்த படத்தில் ரசிகர்களை எப்படி வசீகரித்து உள்ளார் என்பதை பார்க்கலாம்.

மும்பை அசிஸ்டன்ட் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலமான ரஜினி, மும்பையை மிரட்டும் சில ரவுடிகளை வரிசையாக என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் இதனால் மனித உரிமை கழகத்தில் விசாரணைக்கு ஆளாகிறார் ரஜினி. அந்த விசாரணை அதிகாரியின் பார்வையில் இதற்குமுன், தான் பார்த்த ரஜினி எப்படி இருந்தார் என படம் விரிகிறது..

மகள் நிவேதா தாமஸுக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என மாப்பிள்ளை பார்க்க நினைக்கிறார் ரஜினி.. ஆனால், தான் வேறு வீட்டுக்கு சென்றுவிட்டால் தந்தையை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் மகள். திடீரென எதிர்பாராமல் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் நயன்தாராவை தந்தைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் நிவேதா தாமஸ். இந்த நிலையில் மும்பை முழுவதும் போதைப் பொருள் சப்ளை செய்து இளம்பெண்களை கடத்தி சீரழிக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் மகனை கைது செய்து சிறையில் அடைக்கிறார் ரஜினி. ஆனால் அந்த தொழிலதிபரோ ஆள்மாறாட்டம் செய்து தனது மகனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வைக்கிறார்.

தனது தந்திரமான நடவடிக்கையால் தப்பிச்சென்ற அவனை தானாகவே மும்பைக்கு வரவழைத்து அவர்கள் ஆட்களாலேயே போட்டுத்தள்ள முன்வைக்கிறார் ரஜினி ஆனால் அவன் அந்த தொழிலதிபரின் மகன் அல்ல என்றும் 27 வருடங்களுக்கு முன்பு மும்பையில் பல போலீஸ்காரர்களை உயிருடன் எரித்துக் கொன்று விட்டுத் தப்பிச்சென்ற பிரபல ரவுடி சுனில் ஷெட்டியின் மகன் என்பதும் அதிர்ச்சியான இன்டர்வல் பிளாக்.. இதற்கு பிறகு சுனில் ஷெட்டிக்கும் ரஜினிக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமும் அதனால் ஏற்படும் லாப நட்டங்களும் தான் மீதிக்கதை.

வருடத்திற்கு ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையில் பார்ப்பதாலோ என்னவோ அவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்தே அவரிடம் இருக்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.. அதை கடைசிவரையில் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதிரடியான ஆரம்ப சண்டைக்காட்சியில் ஆரம்பித்து அவரது தர்பார் படம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது. இன்னொரு பக்கம் மகள் நிவேதா தாமஸுடன் அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள் இன்னொரு புதுவிதமான ரஜினியை நமக்கு காட்டுகிறது. வழக்கம்போல காமெடியிலும் நான் தான் இப்போதும் கிங்கு என்பதை நிரூபிக்கும் விதமாக யோகிபாபுவுடன் சேர்ந்து காமெடியில் இறங்கி அடித்திருக்கிறார் ரஜினி. குறிப்பாக யோகிபாபுவை புரமோட் பண்ணும் விதமாக யோகிபாபுவின் பாடலை கேட்பது, யோகிபாபு ஆடிய நடனத்திற்கு ஸ்டெப்ஸ் போடுவது என முதல் பாதி முழுவதும் காமெடியால் களைகட்ட வைக்கிறார் ரஜினி. நயன்தாராவுடன் ஏற்படும் ரொமான்ஸ் காட்சிகள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. இது நாள் வரை சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களில் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் மைண்ட் கேம் யுத்திகள் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன.. சூப்பர் ஸ்டார் ரஜினியை வெறும் அதிரடி போலீசாக மட்டுமல்லாமல் சற்றே வில்லத்தனம் கலந்து மாஸ் காட்டும்படி செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த வேகம் இப்போதும் சிலிர்க்க வைக்கிறது.

படத்தில் கதாநாயகியாக வரும் நயன்தாராவிற்கு மிகக்குறைந்த அளவே காட்சிகள் அளிக்கப்பட்டு இருப்பது சற்று ஏமாற்றம் தந்தாலும் படத்தின் வேகத்திற்கு அது தடைபோடாமல் இருக்க வேண்டும் என்கிற டைரக்டரின் முன்னெச்சரிக்கையும் அதில் நன்றாகவே தெரிகிறது.. மற்றபடி வரும் காட்சிகளில் எல்லாம் வழக்கமான கியூட் நயன்தாராவை இந்தப்படத்திலும் ரசிக்க முடிகிறது.

கதாநாயகி நயன்தாரா தான் என்றாலும் அவரைவிட அதிக காட்சியில் கிட்டத்தட்ட படம் முழுக்கவே வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜாலியான அப்பா மகள் பிரண்ட்ஷிப்பை காட்சிக்கு காட்சி ரஜினியுடன் இணைந்து கலர்ஃபுல்லாக வெளிப்படுத்தியிருக்கிறார் நிவேதா தாமஸ். விபத்தில் சிக்கியபின் மருத்துவமனையில் இருக்கும்போது நிவேதா தாமஸ் வெளியிடும் வீடியோவும் பின்னாளில் ரஜினி அந்த வீடியோவை பார்த்து கண் கலங்குவதும் அவரை மட்டுமல்ல படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்கலங்க செய்கிறது.

வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.. 12B படத்தை தொடர்ந்து நீண்ட நாளைக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலை காட்டியிருக்கிறார்… இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார் அதிலும் சொல்லப்போனால் 4 ஐந்து காட்சிகள் மட்டும்தான் வருகிறார் என்றாலும் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்..

யோகிபாபுவுக்கு இதில் நிறையவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.. அவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து கொண்டு வழக்கம்போல தனது ஒன்லைனர் கமெண்ட்டுகளால் காமெடி பட்டாசுகளை வெடிக்க வைக்கிறார். குறிப்பாக ஒரு சில இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவர் மிரட்டுவது போலவும் கலாய்ப்பது போலவும் அதற்கு ரஜினியின் ரியாக்சனும் ரசிகர்களிடம் சிரிப்பொலிகளை சிதற விடுகிறது.

இது தவிர தெரிந்த முகமாக நயன்தாராவின் அண்ணனாக வரும் ஸ்ரீமன் ஒரு காட்சியில் வந்தாலும் ரஜினியுடன் சிறப்பான உரையாடல் ஒன்றை நடத்தி விட்டுச் செல்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூடவே பயணிக்கும் போலீஸ் கதாபாத்திரங்களான சமதா, சஞ்சய் மற்றும் ரணீஷ் தியாகராஜன் இருவரும் ரசிகர்களின் கவனத்தை தனியாக கவர்கின்றனர். மற்றபடி மும்பை நடிகர்களான பிரதீக் பாப்பர், ஜதின் சர்மா, நவாப் ஷா, தலிப் தாஹில் ஆகியோரும் படம் நெடுகிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.

மும்பையின் பிரமாண்டத்தை போலீஸ் ஆளுகைக்கு உட்பட்ட கண்ணோட்டத்தில் மிக அழகாக திரைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.. இவரது கைவண்ணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஒவ்வொரு நட்சத்திரமும் சிறப்பு வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது அனிருத்தின் இசையில் உருவான பாடல்களும் மிரட்டலான பின்னணி இசையும் தான்.. சும்மா கிழி, கண்ணுல திமிரு என ஒவ்வொரு பாடலும் நம்மை எழுந்து ஆட வைக்கும் ரகமாக இருக்கின்றன… குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான தீம் மியூசிக் ரசிகர்களுக்கு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை உற்சாக டானிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

ரஜினி படமா, முருகதாஸ் படமா என்கிற கேள்விக்கு முருகதாஸ் டைரக்சனில் உருவான ரஜினி படம் என்பதே விடையாக இருக்க முடியும்.. அந்த அளவிற்கு தனது படங்களில், தனக்கே உண்டான சில ஐட்டங்களை இந்த படத்தில் அழகாக உள்ளே நுழைத்து இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினியை 40 வயது இளைஞராக காட்டியபோதே இவர் முதல் வெற்றி பெற்று விடுகிறார்.. எதிரிகளை தன்னுடைய வலையில் விழ வைப்பதற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி வகுக்கும் திட்டங்களும் இடைவேளைக்குப்பின் எதிரியுடன் ஆடும் மைண்ட் கேம் ஆட்டங்களும் என சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒரு புதிய கோணத்தில் நமக்கு காட்சி தர செய்திருக்கிறார்.

குறிப்பாக இடைவேளைக்கு முன்பாக படம் செம ஸ்பீடு.. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்கள் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது. அதேபோல நயன்தாராவுக்கும் ரஜினிக்குமான ரொமான்ஸ் விஷயத்தில் நிவேதா தாமஸும் அவரது தந்தையான ரஜினியும் தவறான ஒரு முடிவை எடுத்து விட்டது போல் தான் தோன்றுகிறது இதெல்லாம் படத்தில் யோசிக்கவே தோன்றாத ஒன்றிரண்டு சின்னச்சின்ன மைனஸ்கள் தான்.. மற்றபடி ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த தர்பார் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாகத்தான் இருக்கும்…