“அதிக விலைக்கு விக்குறதும் தப்பு.. வாங்குறதும் தப்பு” – சூடு வைத்த பாக்யராஜ்..!

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘பட்ற’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. மிதுன் தேவ், வைதேகி ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை பாண்டியராஜனின் உதவியாளரான ஜெயந்தன் இயக்கியுள்ளார்.  கடம் வித்வான் விக்கு வினாயக்ராமின் பேரனான கிருஷ்ணா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த விழாவில் சிறப்ப்பு விருந்தினர்களாக பாக்யராஜ் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் படக்குழுவினரை வாழ்த்திப்பேசிய பாக்யராஜ், “இன்றைய சூழலில் ஒரு படத்தை அதிக விலைக்கு விற்பதும் தப்புதான்.. அதை வாங்கி ஜாக்பாட் அடித்துவிடலாம் என அதிக விலை கொடுத்து வாங்குவதும் தப்புதான்.. அதன் பின் உன்னால் நட்டம், என்னால் நட்டம், நீ கொடு.. இல்ல நீ கொடு என ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை” என சமகாலத்தில் நிலவும் பிரச்சனைக்கு ஆலோசனை சொல்லும் விதமாக தனது பேச்சில் சூடு காட்டினார்.

எஸ்.வி.சேகர் பேசும்போது பாக்யராஜுடனான தனது பழைய நினைவுகளை குறிப்பிட்டார். கிழக்கே போகும் ரயில் படம் வெளியான நேரத்தில் பாக்யராஜை கமலா தியேட்டரில் இருந்து என் ஸ்கூட்டர் பின்னாடி உட்காரவைத்து ஓட்டிட்டு போனேன்.. அதன் பின்னால் அவர் பெரிய ஆளா ஆகிட்டார். இப்படி என் ஸ்கூட்டர் பின்சீட்ல உட்கார்ந்தவங்க நிறைய பேர் பெரிய ஆளா ஆகிட்டாங்க.. அதுக்காக இப்ப யாரும் தேடி வந்துராதீங்க.. ஏன்னா அந்த ஸ்கூட்டரை யாரோ திருடிட்டு போயிட்டாங்க” என கலகலப்பூட்டும் விதமாக பேசினார் எஸ்.வி.சேகர்.