பர்மா – விமர்சனம்

சென்னையில் தவணை முறையில் கார் வாங்கி பணம் கட்டாமல் இருப்பவர்களின் கார்களை தூக்கிவரும் தொழிலை செய்து வருபவர் அதுல் குல்கர்னி(சேட்). அவரிடம் வேலைபார்க்கும் சம்பத்(ஆங்ரி பேர்டு) தனக்கு கீழே மைக்கேலை (பர்மா) வேலைக்கு அமர்த்தி கார்களை தூக்குகிறார்..

அவர் தன்னை ஏமாற்றி குறைவான ஊதியம் தருவதை அறிந்த பர்மா, தனது நண்பனுடன் சேர்ந்து சம்பத்தை போலீஸில் சிக்கவைத்து ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு சேட்டுக்காக தனியாக கார்களை தூக்கி தருகிறான்.. ஜெயிலில் இருந்து சம்பத் திரும்பிய வேளையில் தான் பர்மாவிடம் 24 கார்களை தூக்கும் அசைன்மெண்ட்டை ஒப்படைக்கிறார் சேட்டு.

23 கார்களை வெற்றிகரமாக தூக்குகிறான் பர்மா.. இந்த அசைன்மெண்ட்டை முடித்துவிட்டால் பர்மா பெரியாளாகிவிடுவான் என்று நினைக்கும் சம்பத், பர்மா கடைசியாக தூக்கும் காரை அவனுக்கு தெரியாமல் தூக்கி, வேறு பார்ட்டிக்கு விற்றுவிடுகிறார்.

ஆனால் பர்மா தன்னை ஏமாற்றி விட்டதாக தவறாக நினைக்கும் சேட்டு, பர்மாவின் காதலியை பிடித்து வைத்துக்கொண்டு காரை கொண்டுவந்து ஒப்படைக்குமாறு ஒரு நாள் கெடு தருகிறார்.. பர்மா காரை மீட்டு அதன் மூலம் தன் காதலியையும் மீட்டானா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

பர்மாவாக மைக்கேல்.. முந்தைய படத்தை விட இதில் ரொம்பவே மெச்சூர்டாக மாறியிருக்கிறார். குருவி தலையில் பனங்காயை வைத்தது மாதிரியான கேரக்டர்.. இருந்தாலும் பொறுப்பாக சுமந்திருக்கிறார். கார்களை அவர் சீஸ் செய்யும் பாணி பல இடங்களில் நம்பும்படியாக இல்லையென்றாலும், சில இடங்களில் குறிப்பாக செக்போஸ்ட்டில் போலீஸாக நடித்து காரை தூக்குவது என சுவராஸ்யம் கூட்டும் வகையில் தான் நடித்திருக்கிறார்.

ஹீரோ திருட்டு வேலைதான் செய்கிறார் என்று தெரிந்தே அவரை காதலிக்கும் தமிழ்சினிமாவின் எவர்கிரீன் கதாபாத்திரத்தை 1001வது முறையாக செய்திருக்கிறார் கல்பனாவாக வரும் ரேஷ்மி மேனன்.. பல இடங்களில் அவர் சின்ன சமந்தாவாக தெரிவது ஒரு விதத்தில் அவருக்கு ப்ளஸ் தான்.

சேட்டாக வரும் அதுல் குல்கர்னிக்கு வேலை குறைவுதான். ஆனால் ஆங்ரி பேர்டாக வரும் சம்பத்தின் கோல்மால்கள் ரசிக்கவைக்கின்றன. குறிப்பாக இவர்கள் இருவரும் போலீசில் மாட்டும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும் ரகம்.. பர்மாவின் நண்பராக வரும் பூமர்(கார்த்திக் சபேஷ்) அசால்ட்டாக அடித்து பின்னுகிறார்..

படத்தின் வேகத்திற்கு தடைபோடும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கின்றன. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். கார் சீஸிங் என்கிற இதுவரை யாரும் தொடாத ஏரியாவில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் தரணிதரன். கூடவே ஈஸ்டர் எக் கடத்தல், கோடிகளில் கொள்ளையடித்த பணம் ஒவ்வொரு ஆளாக கைமாறுவது என பழக்கப்பட்ட அம்சங்களையும் சேர்த்து மசாலா பூசியிருக்கிறார். இருந்தாலும் ருசியாகவே இருக்கிறது.