ராவண கோட்டத்தில் சாந்தனு ஜோடியாக ஆனந்தி..!

கதிர், ஓவியா நடிப்பில் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநரான விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்தப் படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘ராவண கோட்டம்’ என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை கண்ணன் ரவி குரூப் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக இயக்குநர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு, நாயகியாக ஆனந்தி நடிக்கவுள்ளனர். மேலும் படத்தில் பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், முருகன் (லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆனந்தி பேசுகையில், “பரியேறும் பெருமாள்” போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல கதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு உருவாகியிருக்கிறது. ராவண கோட்டம்’ அந்த மாதிரியான ஒரு திரைப்படம்தான். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களை கவரும் மிகச் சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். ‘மதயானை கூட்டம்’ படத்துக்கு பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார்.

சாந்தனு பாக்யராஜின் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை முதன்முறையாக பார்த்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை திரையில் பார்க்கும்போது நீங்களும் உணர்வீர்கள். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞராகவும் இருக்கிறார். ‘ஃபைட் சாங்’ என்ற கான்செப்டை அடிப்படையாக கொண்ட, ஒரு பொழுதுபோக்கு பாடலில்தான் முதலில் நடித்தேன். சாந்தனு ஒரு திறமையான நடனக் கலைஞராக இருந்தாலும்கூட, அவருடன் நடனம் ஆடியது ஒரு சிறந்த அனுபவம்..” என்றார் நடிகை ஆனந்தி.