அமரகாவியம் இசைவெளியீடு ; கலர்புல் கதாநாயகிகளால் குலுங்கியது சத்யம் தியேட்டர்..!

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆர்யாவே தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘நான்’ பட இயக்குனர் ஜீவாசங்கர் இயக்கியுள்ளார். கேரள நடிகை மியா ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த விழாவில் தமிழ்த்திரையுலகின் முன்னணி கதாநாயகிகளான த்ரிஷாவும் நயன்தாராவும் இணைந்து கலந்துகொண்டது திரையுலகத்தின்ரைடையே மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவர்கள் தவிர ஆர்யாவுடன் ஜோடியாக நடித்த பூஜா மற்றும் ரூபா மஞ்சரி, லேகா வாஷிங்டன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்யாவின் படங்களை இயக்கியுள்ள இயக்குனர்களான பாலா, விஷ்ணுவர்தன், லிங்குசாமி, ஆர்.கண்ணன், ஏ.எல்.விஜய், இயக்கிக்கொண்டிருக்கும் பார்த்திபன், எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி மற்றும் சுசீந்திரன், பிரபு சாலமன் உட்பட அனைத்து இயக்குனர்களும் கலந்துகொண்டது ஆர்யாவின் நட்பு எவ்வளவு வலுவானது என்பதை எடுத்துக்காட்டியது.

மேலும் உதயநிதி, சாந்தனு, ஸ்ரீகாந்த், ஜித்தன் ரமேஷ், விஷ்ணு, விக்ராந்த் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். படத்தின் இசைக்குறுந்தகட்டை த்ரிஷா வெளியிட நயன்தாரா பெற்றுக்கொண்டார். தனது படத்தின் இசைவெளியீட்டு விழாக்களில் கூட கலந்துகொள்ளாத நயன்தாராவும் எப்போதாவது மட்டுமே தலைகாட்டும் த்ரிஷாவும் இந்த விழாவில் கலந்துகொண்டது உண்மையிலேயே இன்று மீடியாக்களுக்கு பரபரப்பான செய்திதான்.