“இது நம்ம ஊரு திரில்லர்” ; ராட்சசனுக்கு அமலாபால் புகழாரம்

amalapaul

விஷ்ணு விஷால், அமலாபால் நடித்திருக்கும் புதிய படம் ‘ராட்சசன்’. இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “பொதுவாக படங்களின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகமாகி கொண்டே இருக்கும். ஆனால் இந்த படத்தின் மீதான நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறேன். கதையை கேட்டவுடனே எனக்கு ரொம்பவே பிடித்தது. படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது, அது தான் பின்னணி இசையமைப்பில் எனக்கு உதவியாக இருந்தது” என்றார்.

அமலாபால் பேசும்போது, “இயக்குனர் ராம் என்னிடம் கதை சொல்லவந்தபோது சரியாகவே கதை சொல்லவில்லை, பின் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார். கதை ரொம்பவே பிடித்துபபி இதில் நடிக ஒப்புக்கொண்டேன். பொதுவாக திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள்.. ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும்” என்றார்

“மரகத நாணயம் இயக்குனர் மூலம் தான் இந்த கதையை நான் கேட்க நேர்ந்தது. விஷ்ணு, அமலாவிடம் கதை சொல்லும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்த ராம்குமார், என்னிடம் கதையை மிகத்தெளிவாக சொன்னார், மிகச்சிறப்பான கதை. இரண்டரை மணி நேரம் மிகவும் சீரியஸான, திரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும் என்பதை ராம் நிரூபித்திருக்கிறார். படத்தின் ரிசல்ட்டை இப்போதே என்னால் உணர முடிகிறது” என்றார் தயாரிப்பாளர் டில்லி பாபு.

நாயகன் விஷ்ணு விஷால் பேசும்போது, “முண்டாசுப்பட்டி படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் கதை எழுதிட்டு இருக்கேன், கொஞ்சம் நேரம் ஆகும் என்றார். பின் அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார், கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என அப்போது நான் கூறினேன். பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோதுதான் இது எனக்கான படம் என்கிற உணர்வு எழுந்தது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

“முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன். முதல் படம் காமெடியாக கொடுத்துவிட்டதால் நான் சீரியஸ் கதையை சொன்னதும் எல்லோருமே யோசித்து சொல்கிறேன் என ஜகா வாங்கினார்கள். ஆனால் டில்லி பாபு சார் தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார்கள், ஆனால் அழுத்தமான கதாபாத்திரமாக இருக்கும். காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே என் குடும்ப நடிகர்கள். இந்த படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.. திரையரங்கில் போய் பார்க்கும் யாரையும் இந்த படம் ஏமாற்றாது இந்த படம் எனக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அருண்ராஜா காமராஜுக்கு நன்றி.” என்றார் இயக்குனர் ராம்குமார்.

இந்த விழாவில் நடிகர் காளி வெங்கட், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி, ஜி.டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக வெளியிடுகிறது.