நடிகர் சிவகுமார் – ஒரு சிறப்பு பார்வை…

11-01-32-Sivakumar

200-க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர் சிவகுமார். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் பெற்றவர்; மேடைப்பேச்சில் வல்லவர்; ஈகைக் குணம் படைத்த மாமனிதர். ஏழைகள் கல்வி பெறவேண்டுமென எவ்வித விளம்பரமுமின்றி அறக்கட்டளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களைக் கலியறிவு பெற வழிகோலியவர். தன்னோடு நில்லாமல் தனது கலை வாரிசுகளாக சூர்யாவையும், கார்த்தியையும் உருவாக்கியவர். இருவருமே தந்தையைப் போலவே பிறருக்கு உதவவேண்டுமென்ற மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பது தனிச்சிறப்பு.

சிவகுமார் பிறந்தது கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள காசிக்கவுண்டபுதூர் என்ற சிற்றூரில். தந்தை பெயர் ராக்கியா கவுண்டர். தாயார் பெயர் பழனியம்மாள். தந்தையார் ஜோசியம் பார்ப்பதில் கைதேர்ந்தவர். சிவகுமார் பிறந்தவுடனேயே அவர் சொன்னாராம் இவனது ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன் தான் போய்விடுவேன் என்று. அவர் சொன்னது போலவே சிவகுமார் பிறந்த 10-ஆவது மாதத்திலேயே அவரது தந்தை அவரது 33-ஆவது வயதில் காலமாகிவிட்டார். சிவகுமாருக்கு ஒரு அக்கா. ஒரு அண்ணன். அண்ணன் சண்முகம் 16-ஆவது வயதிலேயே பிளேக் நோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அப்போது சிவகுமாருக்கு வயது 4. இவர் படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரர்.

சிவகுமாருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமும் ஆற்றலும் இருந்தது. அதை மேலும் வளர்த்துக் கொள்ள சென்னையில் அரசு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். நடிகர் திலகத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட சிவகுமார் அவரது பல படங்களின் காட்சிகளைத் தத்ரூபமாக வரைந்து ஒரு முறை ராயப்பேட்டையிலுள்ள சிவாஜி கணேசனின் வீட்டுக்குக் கொண்டு சென்று காட்டினார். அதை மெய்சிலிர்த்துப் பார்த்துப் பாராட்டிய நடிகர் திலகம் இவரது ஓவியத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பாசமலர் படத்தைத் தயாரித்த இருவரில் ஒருவரான மோகன் என்பரின் மோகன் ஆர்ட்ஸ் விளம்பர நிறுவனத்தில் சிவகுமாரைச் சேர்த்துவிட்டார். அங்கு ஓர்ஆண்டு பயிற்சி பெற்றார். அதன் பிறகு ஓவியக்கல்லூரியில் சேர்ந்து 6 ஆண்டுகள் ஓவியம் பயின்றார். இது அவரது வசந்த காலங்கள் என்பார் சிவகுமார்.

இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்த “காதலிக்க நேரமில்லை” படத்திற்காக புதுமுகங்கள் தேவையென விளம்பரப்படுத்திய போது இவரும் புகைப்படங்களுடன் விண்ணப்பித்தார். ஆனால் அதிர்ஷ்டம் அடித்தது ரவிச்சந்திரன் அவர்களுக்கு. ஆனாலும் படவாய்ப்பு விரைவிலேயே இவரைத் தேடி வந்தது. “காதலிக்க நேரமில்லை” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சோர்ந்து போயிருந்த சிவகுமாருக்கு அவருடைய மாமன் ரத்தினம் என்பவர் ஒரு மகிழ்ச்சியான சேதியைச் சொன்னார். எஸ்.எஸ்.ஆர், ஆர்.விஜயகுமாரியை வைத்து “சித்ரா பௌர்ணமி” என்ற படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். இதைப் பிரபல இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இயக்குகிறார்கள். இதில் விஜயகுமாரியின் தம்பி வேடத்தில் நீ நடிக்கவேண்டுமென்றார். ஆனால் சித்ரா பௌர்ணமி எதிர்பார்த்த நேரத்தில் வரவில்லை. இந்த நேரத்தில் “காக்கும் கரங்கள்” என்ற படத்தை திருலோகசந்தர் இயக்கத்தில் தயாரிக்க ஏவி.எம் நிறுவனம் முடிவு செய்தது. எஸ்.எஸ்.ஆர், ஆர்.விஜயகுமாரி ஜோடியாக நடித்த இப்படத்திற்கு ஒரு புதுமுகம் தேவைப்படவே சிவகுமாரைப் பற்றி ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் சிவகுமாரை ஏவி.எம்-மிடம் சிபாரிசு செய்தனர். அதையேற்று “காக்கும் கரங்கள்” படத்தில் இரண்டாவது கதாநாயகனாக சிவகுமார் ஒப்பந்தமானார்.

சிவகுமாரின் இயற்பெயர் பழனிச்சாமி. அதை சிவகுமார் என்று திருலோகசந்தர் அவர்களும் ஏ.வி.எம்.சகோதரர்களும் மாற்றி வைத்தனர். “காக்கும் கரங்கள்” 1965 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமானது. சிவகுமார் முதலில் நடிப்பதாகயிருந்த சித்ரா பௌர்ணமி பிறகு வெளிவரவேயில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் இதே பெயரைக் கொண்ட வேறொரு படத்தில் சிவாஜிகணேசன் நடித்து வெளியானது.

“காக்கும் கரங்கள்” வெளியாகிய ஒரு வாரத்தில் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஜெமினி நிறுவனத்திலிருந்து “மோட்டார் சுந்தரம் பிள்ளை” படத்தில் சிவாஜிகணேசனின் மூத்த மருமகனாக காஞ்சனாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்து அழைப்பு வந்தது. இதில் சிவகுமார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். “மோட்டார் சுந்தரம் பிள்ளை” படத்தில் நடித்ததற்காக 1500/- ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. பணத்தை அனுப்பிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் படத்தை நல்லபடியாக முடிக்க நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி என்று கடிதமும் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து 1966-இல் காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரேயொரு நாள் நடித்தார். அப்போது தான் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 1967-இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் “கண் கண்ட தெய்வம்” என்ற படத்தில் ஓ. ஏ. கே. தேவர் தம்பியாக நடித்தார். அப்படமும் பெரும் வெற்றிப்படமானது. இப்படத்தில் சிவகுமார் தென்னை மரத்தில் ஏறி இருந்து கொண்டு விஜயராணியைப் பார்த்து பாடும் “தென்ன மரத்தில் குடியிருப்பது சின்ன பாப்பா” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. இதையடுத்து 1967-இல் தாயே உனக்காக என்ற படத்திலும் ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் வெளியான மாபெரும் பக்திப்படமான “கந்தன் கருணை” படத்திலும் நடித்தார். தாயே உனக்காக படத்தில் எம்.ஜி.ஆர் நீங்கலாக சிவாஜிகணேசன், பத்மினி போன்ற அன்றைய பிரபல நடிகர்/நடிகைகள் பலர் ஒரு காட்சியிலாவது நடித்திருந்தனர். அதனால் அப்படத்தின் பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளில் சிவாஜிகணேசன் போன்ற பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டிருந்ததோடு சிவகுமார் படம் ஒரு மூலையில் சிறிய அளவில் வரையப்பட்டது. சிவாஜிகணேசனின் படமென நம்பிச் சென்ற ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்ததனால் அப்படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க நடிகர்களைத் தேடிக்கொண்டிருந்தார் இறையருள் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். சுமார் 30 நடிகர்களை வரவழைத்துப் பார்த்தும் எவருமே அவருக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி ஏவி.எம்-மில் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் சிவகுமார் என்றொரு பையன் எங்கள் காக்கும் கரங்கள் படத்தில் நடித்துள்ளான். அவன் முருகன் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பான். மேக்கப் டெஸ்ட் எடுத்துப்பாருங்கள் என்று ஏவிஎம் கூறினார். அதனையேற்று மேக்கப் டெஸ்ட் நடந்தது. சிவகுமாருடன் இதே வேடத்திற்காக வந்த மற்றொருவர் நடிகர் விஜயகுமார். இறுதியில் தெரிவானவர் சிவகுமார். அதில் வீரபாகுவாக சிவாஜியும் முருகனாக சிவகுமாரும் வள்ளியாக ஜெயலலிதாவும், தெய்வானையாக கே.ஆர்.விஜயாவும் நடித்திருந்தனர். இப்படத்தில் சிவகுமாரின் தோற்றமும் நடிப்பும் சிறப்பாக அமையவே புராணப்படங்களில் கடவுள் வேடம் போடுவதற்கு ஏற்ற நடிகர் சிவகுமார் தான் என்று படவுலகினர் ஏகோபித்து முடிவு செய்தனர்.

சரஸ்வதி சபதம் படத்தில் இவர் மஹாவிஷ்ணு, சிவாஜிகணேசன் நாரதர், திருமால் பெருமை படத்தில் சிவகுமார் திருமாலாகவும் சிவாஜிகணேசன் திருமங்கை மன்னனாகவும் நடித்தனர். எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின் 1967-இல் மீண்டும் காவல்காரன் வளர்ந்தது. அப்படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார். 1968-இல் உயர்ந்த மனிதனிலும் ஜீவனாம்சம் படத்திலும் நடித்தார். சிவகுமார்-லட்சுமி, ஜீவனாம்சம் படத்தில் இணைந்த இந்த ஜோடிகள் 12 படங்களில் தொடர்ச்சியாக நடித்தனர். இதற்கு முன் நடித்த படங்களில் பெரும்பாலும் சிவகுமாரை விட மூத்த நடிகைகளான தேவிகா, காஞ்சனா, புஷ்பலதா போன்றோர்தான் ஜோடியாக நடித்திருந்தனர். அவர் வயதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ற இளம்பெண்ணாக முதன்முதலில் நடித்தவர் லட்சுமி தான். இந்த ஜோடிகளுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பிருந்தது. இதையடுத்து ஜெயகாந்தன் எழுதிய காவல் தெய்வம் படத்திலும் இருவரும் இணைந்தே நடித்தனர்.

சிவகுமாரின் நடிப்புத் திறமைக்கு சவாலாக அமைந்த படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த “காரைக்கால் அம்மையார்”, இந்த படத்தில் சிவகுமார் சிவனாகவும் ஸ்ரீவித்யா பார்வதியாகவும் நடித்தனர். ஸ்ரீவித்யா சிறு வயதிலிருந்தே முறைப்படி நடனம் கற்றுத் தேறியவர். இதில் குன்னக்குடி வைத்யநாதனின் இசையில் உருவான “ தக,தக,தக தக,தக என ஆடவா……… சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா ” என்ற பாடலுக்கு ஸ்ரீவித்யாவுடன் போட்டியிட்டு ஆடவேண்டும். இது குறித்து கே.பி.சுந்தராம்பாள் கூட ஏ.பி.நாகராஜனிடம் இந்த பையனுக்கு நடனம் வருமா?…….. காட்சி சொதப்பிவிடக் கூடாதே என்று முறையிட்டாராம். அதற்கு ஏ.பி.நாகராஜன் அம்மா பாருங்கள் இந்த பையனை வைத்தே அந்தக் காட்சியை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறேன் என்றாராம். அதன்படி அப்படத்தின் நடன இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சிவகுமாரை இரண்டு வாரம் பயிற்சி எடுத்து வரச்செய்து முறையாக நடனம் பயின்ற ஸ்ரீவித்யாவுக்கு நிகராக ஆடியதோடு கே.பி.சுந்தராம்பாள் முதல் படக்குழுவினர் அனைவரையும் திகைப்படையச் செய்தாராம் சிவகுமார்.

1973-இல் சிவகுமார் நடித்த படங்கள் திருமலைத் தெய்வம், கிருஷ்ணலீலா, அரங்கேற்றம், பாரத விலாஸ், இராஜ ராஜ சோழன், பொண்ணுக்குத் தங்க மனசு, சொல்லத்தான் நினைக்கிறேன், 1974-இல் நடித்த படங்கள் வெள்ளிக்கிழமை விரதம், தீர்க்க சுமங்கலி, திருமாங்கல்யம், எங்கம்மா சபதம், குமாஸ்தாவின் மகள், தங்கத்திலே வைரம், பெண்ணை நம்புங்கள் போன்றவை.

–ஜனனி