ஆல்பர்ட் தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ 100வது நாள் கோலாகல கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர் நடித்த படங்களை மீண்டும் டிஜிட்டலுக்கு மாற்றி திரையிடும்போது அது அவர் காலத்தைப் போலவே இப்போதும் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடுவது காலம் கடந்தும் நிற்கும் தலைவன் என்றால் அது எம்.ஜி.ஆர் ஒருவர்தான் என்று உணர்த்துகிறது.

அந்தவகையில் 1965ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி கடந்த மார்ச்-14 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக புரட்சித்தலைவி ஜெயலலிதா நடித்திருந்தார். மற்றும் நம்பியார், நாகேஷ், மனோகர் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்கள்.

சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் திரையிடப்பட்ட இந்தப்படம் வெற்றிகரமாக 100வது நாளை தொட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த நூறாவது நாள் விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள இயக்குனர் பி.வாசு, மயில்சாமி ஆகியோர் வந்திருந்தனர். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனை கலைஞரான பீதாம்பரத்தின் மகன் தான் பி.வாசு. அதேபோல மயில்சாமி புரட்சித்தலைவரின் தீவிர ரசிகன் ஆவார். இந்த கொண்டாட்டத்தின்போது எம்.ஜி.ஆரின் அறுபது வயது ரசிகர்கூட இருபது வயது ரசிகராக மாறி இன்றைய ட்ரெண்டிற்கு இறங்கி பாட்டு, டான்ஸ் என மிரட்டினார்கள்.

நேற்றைய தினம் பல ரசிகர்கள் இந்தப்படத்தை காணவந்து டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற காட்சியையும் காண முடிந்தது. கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ரசிகர் ஒருவர் புரட்சித்தலைவரின் போஸ்டரை கண்கலங்க பார்த்துக்கொண்டே ஆதங்கத்துடன் உணர்ச்சி மேலிட இப்படி சொன்னார், “உனக்குன்னு ஒரு தியேட்டர் கட்டாம விட்டுட்டியே தலைவா..”