என்னை அறிந்தால் – விமர்சனம்

அதிரடி போலீஸ் அதிகாரிக்கும் அண்டர்கிரவுண்ட் ரவுடிக்கும் நடக்கும் ‘நீயா? நானா? யுத்தம் தான் படத்தின் கரு.

நேர்மையான போலீஸ் அதிகாரியான அஜித், ரவுடி அருண்விஜய்யிடம் நட்பாகி, அவரது கூட்டாளிகளை எல்லாம் போட்டுத்தள்ளுகிறார். பழிவாங்கும் வெறியுடன் திரும்பி வரும் அருண்விஜய் கொடுக்கும் டார்ச்சர்களும் அதை அஜித் சமாளிப்பதும் தான் 2 மணி 56 நிமிட படம்..

படம் நீளம் தானே தவிர, எந்த இடத்திலும் நம்மை கொட்டாவி விட வைக்கவில்லை. காரணம் பிரேம் பை பிரேம் அஜித்.. அஜித்.. அஜித்.. அமர்க்களம், அட்டாகாசம், ஆரம்பம் என பல படங்களில் வந்த தனது கெட்டப்புகளை இந்தப்படத்தில் நுழைத்து ரசிகர்களை பரவசப்படுத்துகிறார் அஜித்.. பஞ்ச் வசனம் இல்லாத, ஆனால் அழுத்தமான வசனங்களை அஜித் உச்சரிப்பதே ஒரு அழகு தான். த்ரிஷாவை தேடிப்போய் காதலிப்பதில் ‘வேட்டையாடி விளையாடி’ இருக்கிறார் அஜித். சண்டைக்காட்சிகளிலும் அசால்ட் பண்ணுகிறார்.

“இங்கே ஒரு கொலை நடக்கபோகுது.. யாரும் செல்போன்ல வீடியோ எடுக்கிறதுன்னா எடுத்துக்குங்க” என அருண் விஜய்யின் அறிமுகமே தடையற தாக்குகிறது. வில்லனாக நடிப்பில் புதிய கலர் காட்டியிருக்கிறார். குறிப்பாக கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ் இவர் கைக்கு போய்விடுகிறது. இது அருண்விஜய்க்கு கிடைத்திருக்கும் மறுபிறவி. இதை கவனமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் ஜோதிகா கேரக்டரை அப்படியே ரீப்ளேஸ் பண்ணியிருக்கிறார் த்ரிஷா.. ஆனால் அழு மூஞ்சியாக இல்லாமல், என்றென்றும் புன்னகையுடன் அவர் காட்சியளிப்பது ப்ளஸ் பாயிண்ட். படத்தில் கால்வாசி நேரம் அஜித்தை பார்த்து ஆச்சர்யப்பட்டபடி அவருக்கு லவ் அப்ளிகேஷன் போடுவதும், எதிரிக்கு பயந்து அஜித்திடம் அடைக்கலமாவதும் என அனுஷ்காவின் பணி இறுதிவரை சிறப்பு.

வில்லனின் மனைவி நல்லவளாகத்தான் இருக்கவேண்டும் என்கிற கிளிஷேக்களை உடைத்து நடிப்பில் ஆச்சர்ய முகம் காட்டியிருக்கிறார் பார்வதி நாயர். ஏர்போர்ட்டுக்குள் ஹெல்மெட் அணிந்து வருவதில் இருந்து அனுஷ்காவின் உயரத்தை கலாய்ப்பது வரை விவேக்கின் காமெடி லிமிடெட் ஏரியாவிலேயே பயணிக்கிறது. ஒரு சீரியசான இடத்தில் அஜித், விவேக்கின் பழைய ‘மைனர் குஞ்சு’வை ஞாபகப்படுத்துவது புன்னகையை வரவழைக்கிறது.

அஜித்தின் பிடியில் இருந்துகொண்டே அவரை போட்டுவிடட்டுமா என உதார் காட்டும் ‘குட்டிப்புலி’ ராஜசிம்மன், ஸ்கெட்ச் போட்டு அஜித்தை வரவழைத்து வலிய மாட்டிக்கொள்ளும் ஆசிஷ் வித்யார்த்தி, நட்புக்காக இரண்டே காட்சிகளில் அஜித்தின் அப்பாவாக வந்துபோகும் நாசர், இதயமே இல்லாமல் இன்னொருவரின் இதயத்துக்காக அலையும் சுமன் என பலரும் கதையை தங்கள் ஏரியாவிலிருந்து கவனமாக அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்.

கௌதம் மேனனின் படங்களில் பாடல்கள் தான் ஹைலைட்டாக இருக்கும்.. இதிலும் ஹாரிஸின் இசையில் ‘வா ராஜா வா வா’ என பெப்புடன் ஆரம்பித்தாலும் அடுத்தடுத்த பாடல்கள் சுவராஸ்யமின்றி கடந்து போகின்றன. படத்தின் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு பக்கபலமாக தனது உழைப்பை கொட்டியிருக்கிறார் கேமராமேன் டாம் மெக்கார்தர்.

மீண்டும் போலீஸ் ரவுடி கதையை கையில் எடுத்து ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறார் கௌதம் மேனன். க்ளைமாக்ஸுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே ரசிகனை சீட்டின் நுனிக்கு இழுத்து வந்துவிடுவதில் ஜெயித்திருக்கிறார். ஆனால் வசனங்களில் கௌதம் மேனனையே பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், அவரது முந்தைய இரு படங்களின் சாயல்கள் என தவறியோ, தவிர்க்க முடியாமலோ இடம்பெற்றிருப்பதை இதில் தவிர்த்திருக்கலாம். வில்லனை கண்டுபிடிப்பதில் இன்னும்கூட கொஞ்சம் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது..

மற்றபடி, முந்தைய படத்தின் தோல்வியின் மூலம், தன்னை அறிந்துகொண்ட கௌதம் மேனன், இப்போது ‘என்னை அறிந்தால்’ மூலம் விட்டதை பிடித்திருக்கிறார்.