ஏண்டா தலையில எண்ண வைக்கல – விமர்சனம்

தலைப்பே வித்தியாசமாக, நம் வீடுகளில் அடிக்கடி கேட்கும் வார்த்தையாக இருக்கிறது அல்லவா..? இதைவைத்து ஒரு படத்தை உருவாக்க முடியுமா..? முடியும் என தனது பாணியில் சுவாரஸ்யம் கூட்ட முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

நாயகன் அசார் படித்து விட்டு சினிமாவில் இயக்குனராக முயற்சி செய்கிறார். வெட்டியாக சுத்தும் இளைஞனுக்கு காதலும் அவசியம் தானே.. அதுவும் ஒருகட்டத்தில் காதலி சஞ்சிதா மூலம் தேடி வருகிறது. ஆனால் திடீரென ஒரு அமானுஷ்ய குரல் ஒன்று அவர் நீண்ட நாட்களாக எண்ணெய் தேய்க்காமலேயே இருப்பதற்காக அவரை கொல்லப்போவதாக கூறி பீதியை கிளப்புகிறது.

இதிலிருந்து அவர் தப்பிக்க வேண்டுமானால் அவருக்கு கொடுக்கப்படும் நான்கு டாஸ்க்குகளை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. கிழவியிடம் அடிவாங்குவது, தற்கொலை செய்யப்போகும் பெண்ணை காப்பாற்றுவது, விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதியை ஒன்று சேர்ப்பது, தனது காதலியையே சுட்டுக்கொல்வது என எல்லாமே வில்லங்கமான டாஸ்க்குகளாகவே இருக்கின்றன.

இதையெல்லாம் அசார் சரியாக செய்து முடித்தாரா..? இதை முடிப்பதற்குள் அவர் படும் பாடு என்ன இதுதான் மீதிப்படம் இவற்றை ஓரளவு ரசிக்கும் விதமாகவே படமாக்கி இருக்கிறார்கள்.

அசார் புதுமுகம் என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அவரை வெகுநாள் பார்த்து பழகியவர் போல காட்டுகிறது. டாஸ்க்குகளை அறிவித்த பின் ஒவ்வொன்றையும் முடிக்க அவர் படும் பாட்டை பார்க்கும்போது நமக்கே அவர் மீது பரிதாபம் வருகிறது. நாயகியாக சஞ்சிதா ஷெட்டி ஒகே..

காரில் கடத்தப்படும் மந்திரி மகளாக அழகுப்பெண் ஈடன் குரியாகோஸ் மனதை அள்ளுகிறார். அசாரின் நண்பனாக படம் முழுதும் வரும் சிங்கப்பூர் தீபனுக்கு நல்ல வாய்ப்பு.. ஓரளவு சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனாலும் மூன்றாவது டாஸ்க்கில் கால்மணி நேரம் மட்டுமே என்ட்ரி கொடுத்தாலும் அப்ளாஸ் அள்ளுகிறார் யோகிபாபு. அவருக்கும் அர்ச்சனாவுக்குமான டிவி ரிப்பேர் காமெடி கொஞ்ச ஓவர்தான் என்றாலும் ஜாலியாக சிரிக்க முடிகிறது. மன்சூர் அலிகானும் தன பங்கிற்கு கலகலப்பூட்டுகிறார்.

எண்ணெய் தேய்க்காமலேயே சுற்றுபவர்களுக்கு விடுக்கப்படும் ஒரு ஜாலியான எச்சரிக்கையாக இந்தப்படம் நகர்கிறது. அதேபோல அதிகமாக சிகரெட் பிடிப்பவர்களுக்கும் இதேபோல நேரும் என செகண்ட் பார்ட்டுக்கும் லீட் கொடுத்திருப்பது செம லந்து.

முதல் பாதியில் அப்படி இப்படி என கொஞ்சம் கதையை நகர்த்த தடுமாறி இருந்தாலும், இடைவேளைக்குப்பின் படம் முழுதும் சுவாரஸ்யம் கூட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்..