ஏமாலி – விமர்சனம்

yemali review

இன்றைய இளைஞர்கள் காதலையும் காதல் பிரிவையும் எவ்விதம் கையாளுகிறார்கள் என்பதை கொஞ்சம் உண்மைக்கு பக்கத்தில் நின்று சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் ஏமாலி..

சாப்ட்வேர் இளைஞன் சாம் ஜோன்ஸ் நாயகி அதுல்யாவுடன் காதலாகிறார்.. காதல் கைகூடியதுமே வழக்கம்போல ஆண்களுக்கு மன்டைக்கனம் கூடும் தானே.. அதேதான் இவர்கள் விஷயத்திலும் நடக்கிறது. சாம் ஜோன்ஸின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போன அதுல்யா காதலை பிரேக் அப் பண்ணிவிட்டதாக கூறுகிறார்.

முதலில் இதை விளையாட்டாக எடுத்து பிரேக் அப் பார்ட்டி எல்லாம் கொடுத்து கொண்டாடினாலும், போகப்போக காதல் பிரிவின் வலியை தாங்க முடியாத சாம் ஜோன்ஸ் அதுல்யாவை கொல்ல முடிவெடுக்கிறார். அவருடன் கூடவே இருக்கும் சமுத்திரக்கனி அவரது கோபத்தை தணித்து அவரை சாந்தப்படுத்த முயல்கிறார். ஆனாலும் சாம் ஜோன்ஸ் தீவிரமாக இருக்கவே, அவரது போக்கிலேயே விட்டுப்பிடித்து அவரது கொலை செய்யும் எண்ணத்தை மாற்ற நினைக்கிறார் சமுத்திரக்கனி.

இதற்காக மாட்டிக்கொள்ளாமல் கொலைசெய்வது எப்படி என்பதையும் கொலைசெய்துவிட்டால் அதன்பின் போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் முன்கூட்டியே கற்பனையாக திட்டமிடுகிறார்கள்..

இவர்கள் திட்டப்படி அதுல்யாவை கொன்றார்களா..? இல்லை ஏதோ ஒரு கட்டத்தில் இந்த கொலை எண்ணத்தை சாம் ஜோன்ஸ் மனதில் இருந்து சமுத்திரக்கனி அகற்றினாரா..? காதலர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவானதா என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

காதலர்கள் காதலிக்க மெனக்கெடுவது போல, கிடைத்த காதலை தக்கவைத்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.. இதை சாம் ஜோன்ஸ் கேரக்டர் மூலம் அழகாக உணர்த்தியுள்ளார் இயக்குனர் துரை. மூன்றுவித கெட்டப்புகளில் வரும் சாம் ஜோன்ஸ் காதல் இளைஞனாக அவர் மீது அதிகப்படியான கோபம் வருமாறு நடித்துள்ளார். மற்ற இரண்டு கேரக்டர்களில் முற்றிலும் மாறுபட்ட முகம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.

இன்னொரு கதாநாயகனாக வரும் சமுத்திரக்கனிக்கும் மூன்று வேடங்கள் தான். இதில் பக்குவப்பட்ட மனிதராக நாயகனை திருத்த முயல்வதும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றிய பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் இணைந்து வாழ முயற்சிக்கும்போது நாகரிக எல்லையை கடைபிடிப்புதும் என காதலை, பெண்களின் மனதை அணுக வேண்டிய முறையை அழகாக பாடம் எடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக, சிபிஐ அதிகாரியாக அவரது இரண்டு கேரக்டர்களும் எதற்கு என்பதற்கு படத்தை பார்த்தால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்.

நாயகி அதுல்யாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.. பயன்படுத்தியுள்ளார். அவரைவிட தற்கொலைக்கு முயற்சித்து காப்பற்றப்பட்ட பெண்ணான ரோஷினி கவனம் ஈர்க்கிறார். சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸின் நண்பர்கள் கூட்டணியில் பாலசரவணன் கலகலப்பூட்ட முயற்சிக்கிறார்.. ஏன் நீங்க மட்டும் தான் அட்வைஸ் பண்ணனுமா என சமுத்திரக்கனியையே வாருவது செம லந்து. கற்பனை காட்சிகளில் கான்ஸ்டபிளாக வரும் சிங்கம் புலியின் காட்சிகள் கலாட்டா தான்.

கொலை செய்தால் விசாரணை எப்படி இருக்கும் என்கிற முன்கூட்டிய திட்டமிடலுக்கான காட்சிகள் புதுமுயற்சி தான் என்றாலும் அவற்றிலும் சமுத்திரக்கனியையும் சாம் ஜோன்சையுமே பயன்படுத்தி இருப்பது சாதாரண ரசிகனை நன்றாக குழப்பவே செய்யும். அந்தவகையில் இவர்களது கற்பனை திட்டத்தில் பாலசரவணன் இடம்பெறாமல் சிங்கம் புலி இடம் பெறுவதும் லாஜிக்காக இடிக்கிறது. க்ளைமாக்ஸ் நாம் முற்றிலும் எதிர்பாராதது.

ஒரு இக்கட்டான சூழலில் காதலில் பிரேக் அப் ஏற்பட்டாலும் அதை அமைதியாக அணுகுவது தான் நல்லவிதமான தீர்வை அளிக்கும்.. ஆத்திரம் எப்போதும் அழிவையே தரும் என்பதை சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் துரை.. அதற்காக அவரை பாராட்டலாம்.