எமன் – விமர்சனம்

yeman review 1

விஜய் ஆண்டனி படம் என்றாலே இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு எழுந்துவிடுகிறது.. அதிலும் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆன்டணி நடித்துள்ள படம் என்பதால் ‘எமன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்கு ஆனது.. இந்தநிலையில் எப்படி வந்ந்திருக்கிறார் எமன்..? பார்க்கலாம்

அரசியலில் நல்ல பொறுப்புக்கு வரும் முன்பே நண்பனின் சதியால் கொல்லப்படுகிறார் திருநெல்வேலி அரசியல்வாதி விஜய் ஆண்டனி.. அவரது மனைவியும் இறந்துவிட தாத்தா சங்கிலி முருகனிடம் வளர்கிறார் பேரன் (ஜூனியர்) விஜய் ஆண்டனி.. (டபுள் ஆக்சன் ரோல்)

இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் சென்னையில் வளரும் விஜய் ஆண்டனி தாத்தாவின் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்துக்காக, செய்யாத ஒரு குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போகிறார். எந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போனாரோ அதனாலேயே, எதிர்பாரதவிதமாக ஜெயிலில் லோக்கல் தாதாக்களான மாரிமுத்துவின் நட்பையும் ஜெயக்குமாரின் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கிறார்.

ஜெயிலில் இருந்து வெளிவந்தபின் மாரிமுத்து மூலமாக முன்னால் எம்.எம்.ஏவான தியாகராஜனின் நட்பு கிடைக்கிறது. நட்பு போர்வை போர்த்திக்கொண்டு தன்னை பலியிட துடிக்கும் அரசியல் கருங்காலிகளை பலிகடாக்களாக ஆக்கி முன்னேறுகிறார் விஜய் ஆண்டனி.. இந்தநிலையில் தியாகராஜனின் செல்வாக்கால் மந்திரி மூலமாக பார் ஒன்று விஜய் ஆண்டனி கைக்கு வருகிறது..

ஆனால் அந்த மந்திரிதான் தனது தந்தையின் மரணத்துக்கு காரணமானவர் என தெரியாத நிலையில், தனது காதலி மியாவுக்காக அவருடன் மோதும் சூழல் விஜய் ஆண்டனிக்கு ஏற்படுகிறது.. இதனால் மந்திரியை திட்டமிட்டு மாட்டிவிட்டு அவரது பதவி பறிபோக காரணமாகிறார் விஜய் ஆண்டனி.. மேலும் தியகாரஜனை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதுபோல காய் நகர்த்தும் விஜய் ஆண்டனி திடீரென யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்கிறார்..

இதை தொடர்ந்து காட்சிகள் அப்படியே மாற தியாகராஜனும் மந்திரியும் ஓரணி சேர்ந்து விஜய் ஆண்டனிக்கு எதிராக திரும்பும் சூழல் உருவாகிறது.. விஜய் ஆண்டனியால் இவர்களை எதிர்கொண்டு சாதிக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வந்துள்ள அரசியல் படம் என்பதால் நம்மால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது.. கொடுவா மீசை, அடர்ந்த தாடி என எந்த கெட்டப்பில் வந்தாலும் உறுத்தாத நடிப்பை ரசிக்கும் விதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி..

ஒவ்வொரு கட்டத்திலும் அவர் காட்டும் நிதானமும் அதிரடியும் என அவரது கேரக்டருக்கான பில்டப்பை தாமாக உருவாக்கி விடுகின்றன.. தன்னை அழிக்க நினைப்பவர்களை அவர் களையெடுக்கும் விதம் கூட சரியான அரசியல்..

நாயகியாக மியா ஜார்ஜ்.. குறைந்த அளவு காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பாலும் அழகு முகத்தாலும் நம்மை வசீகரித்து விடுகிறார்.

நம்ம மம்பட்டியான் தியாகராஜனா இது.. அமைதியான அலட்டல் இல்லாத நடிப்பால் அசத்துகிறார்.. விஜய் ஆண்டனிக்கு காட் பாதராக மாறுவதும், அரசியல் என வரும்போது அவருக்கெதிராக திரும்பும்போதும் தனது கேரக்டரை கம்பீரமாக செய்திருக்கிறார்.. இனி தியாகராஜனின் புது இன்னிங்க்ஸ் ஆரம்பம் என்றே தாராளமாக சொல்லலாம்.

ஜாதி மற்றும் பதவி வெறி பிடித்து நண்பனையே கொல்லும் அரசியல்வாதியாகவும் பிற்பாடு மந்திரியாகவும் நடித்துள்ள அருள் டி.சங்கர், லோக்கல் அரசியல் தாதாக்களாக வரும் மாரிமுத்து, ஜெயக்குமார் என மூவருமே சரியான பொருத்தமான தேர்வு.

மந்திரியின் பி.ஏவாக சார்லி… வெகு இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.. இயக்குனர்களே சார்லியை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.. விஜய் ஆண்டனியின் நண்பனாக வரும் லொள்ளுசபா சுவாமிநாதன் அளவான காமெடி, அற்புதமான குணச்சித்திர நடிப்பு என இதில் புது ரூட் போட்டிருக்கிறார். சங்கிலி முருகனை பற்றி சொல்லவே தேவையில்லை.. இயல்பான தாத்தாவாகவே வந்து போகிறார்.

விஜய் ஆண்டனியே இசையமைத்திருப்பது படத்திற்கு பலமே.. குறிப்பாக பின்னணி இசை அவருக்கு தோதாக விளையாடுகிறது. அரசியல் தான் களம் என்றான பிறகு மக்கள் அரசியலை தீவிரமாக பேசாமல், அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளை மட்டும் திரைக்கதையாக கோர்த்து இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பாகவே படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.. படத்தில் எதிர்ப்படும் ஒருசில எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு பலமே.

க்ரைம் த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் என்பது போல இந்தப்படத்தை ஒரு அரசியல் த்ரில்லர் என்று தாராளமாக சொல்லலாம்..