யாகாவாராயினும் நாகாக்க – விமர்சனம்

குடித்துவிட்டு பொது இடத்தில் மற்றவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா..? அப்படியானால் இது உங்களுக்கான படம் தான்.

மிடில் கிளாஸ் ஆதிக்கு கையில் பச்சைகுத்தும் அளவுக்கு வசதியான வீட்டுப்பையன்கள் மூன்று பேர் திக் பிரண்ட்ஸ்.. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களில் ஒருவரான எம்.பி.யின் மகன் குடி போதையில், கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த ரிச்சா பலோட்டை அவரது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்கிறார்.

தட்டிக்கேட்க வரும் ரிச்சாவின் பாய்பிரண்டுடன் ஏற்படும் கைகலப்பில் நண்பர்கள் இருவர் ரிச்சாவின் பாய் பிரண்டை தாக்கி விடுகிறார்கள். அங்கே வரும் போலீசும் இவர்கள் பெரிய இடத்துப்பிள்ளைகள் என தெரிந்துகொண்டு இவர்களை சலாம் போட்டு அனுப்பிவிட்டு, ரிச்சாவை அவமானப்படுத்தி, அவரது காதலரையும் ஜீப்பில் ஏற்றுகிறது.

ஆனால் அந்த சம்பவத்தால் அவர்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் ஆபத்து, ஏண்டா இப்படி நடந்துகொண்டோம் என இந்த நால்வரையும் வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடும் அளவுக்கு துரத்தி அடிக்கிறது. இதில் முதல் பலிகடாவாக சிக்குகிறார் ஆதி. பின்னர் வரிசையாக நண்பர்களும் சிக்குகிறார்கள்.

கமிஷனர், எம்.பி என பதவியும், அதிகாரமும் வாய்ந்த அப்பாக்களால் கூட தங்களது மகன்களை காப்பற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. பிரச்சனையில் இருந்து நால்வரும் மீண்டனரா..? அல்லது எதிரியிடம் சிக்கி மாண்டனரா என்பது தான் பரபர க்ளைமாக்ஸ்.

ஆதிக்கு ஆக்சன் ஹீரோவாக அருமையான இன்னிங்க்ஸ் துவங்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் ரௌத்திர மூர்த்தியாக மாறியிருக்கிறார் . நண்பர்களுடன் கலாட்டா, காதலி நிக்கி கல்ராணியுடன் ரொமான்ஸ், எதிரியின் கோட்டைக்குள் நுழைந்து அவர்களிடமே மன்னிப்பு கேட்கும் தைரியம் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் பண்ணுகிறார் ஆதி. 

அட்ராசிடி காதலியாக ஆதியை மிரள வைக்கும் நிக்கி கல்ராணி, எங்கேயும் எப்போதும் அஞ்சலியின் ஹைடெக் வெர்ஷன். டாஸ்மாக்கில் பீர் வாங்குவது, மெடிக்கலில் காண்டம் வாங்குவது என ஆரம்பத்திலேயே கிறுகிறுக்க வைக்கும் நிக்கி, இடைவேளைக்குப் பின்னான சீரியஸ் திரைக்கதையில் கொஞ்ச நேரம் காணாமல் போய் விடுகிறார்.

லோக்கல் தாதாவாக வரும் பசுபதியிடம் ஜென்டில்மேன் நடிப்பு.. பம்பாய் முதலியார், அவரது மகன் இருவரையும் நியாயமான வில்லன்களாக சித்தரித்திருப்பதும் அதற்கு அவர்கள் உயிர் கொடுத்திருப்பதும் புதுசு. கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபத்தை அள்ளுகிறார் ரிச்சா பலோட். ‘கள்ளபடம்’ லட்சுமி பிரியாவின் டெரர் எபிசோட் ட்விஸ்ட் தான் என்றாலும் வலிந்து திணித்தது நன்றாகவே தெரிகிறது.

ஆதியின் பெற்றோராக ஆடுகளம் நரேனையும் பிரகதியையும் பார்த்ததும், கடந்த வாரம் வெளியான சந்தானத்தின் படத்தில் தான் இருக்கிறோமோ என்கிற உணர்வு சில நொடிகள் ஏற்படுவது உண்மை. ஆதியின் நண்பர்களாக வந்து பிரச்சனைக்கு வித்திடும் நண்பர்கள் மூவரும் செலக்டிவான பாத்திரங்கள்..

ஒரு வார்த்தை கொல்லும் ஒருவார்த்தை மெல்லும் என சொல்வதற்கேற்ற மாதிரி வரம்பு மீறி பேசப்படும் வார்த்தை நமக்கே எதிராக திரும்பிவிடும் என்கிற நியாயத்தை திகில் மற்றும் திரில் கலந்த சஸ்பென்சுடன் இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனரான சத்யா பிரபாஸ்.

இருமொழிப்படத்திற்கான பிளான் என்பதாலோ என்னவோ க்ளைமாக்சில் ஆந்திர வாடை நன்றாகவே அடிக்கிறது. க்ளைமாக்ஸ் நீளத்தை இன்னும் ட்ரிம் பண்ணியிருந்தால் க்ரிப்பாக இருந்திருக்கும். தப்பு பண்ணிய அந்த நண்பர்கள் இருவரும் தங்களது தவறை உணராமல் இருப்பதும் அந்த இருவருக்காக ஆதி வாதிடுவதும் போராடுவதும் தான் கடைசிவரை நெருடலாக உள்ள விஷயம்..

மொத்தத்தில் விறுவிறுப்பான ஒரு முழுநீள த்ரில்லருக்குன்டான சகல அமசங்களும் கொண்ட படம் தான் ‘யாகாவாராயினும் நாகாக்க’.