யாமிருக்க பயமே – விமர்சனம்


வேலைவெட்டி இல்லாமல் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு திடீர் என அவரது தந்தை எழுதிவைத்த உயில்படி கொள்ளியூர் எஸ்டேட் பங்களா கிடைக்கிறது. அவரும் அவரது காதலி ரூபாமஞ்சரியும் அங்கு செல்கிறார்கள். அவருக்கு அங்கே வேலைபார்க்கும் கருணாநிதியும் அவரது தங்கை ஓவியாவும் உதவி செய்கிறார்கள்.

அந்த பங்களாவை கெஸ்ட் ஹவுஸாக மாற்றி வாடகைக்கு விடுகிறார்கள். ஆனால் அங்கே வந்து தங்குபவர்கள் எல்லாம் அன்றைய தினமே மர்மமான முறையில் இறக்கிறார்கள். கிருஷ்ணா அன் கோ இறந்தவர்களை எல்லாம் குழிதோண்டி புதைக்க, ஒருகட்டத்தில் புதைக்கப்பட்ட இடத்தில் பிணங்கள் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.

அதேநேரம் அங்கே வந்து தங்கியவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்துபோன அந்த பங்களாவின் முன்னாள் ஓனர்கள் என தெரியவருகிறது. இப்போது அந்த பங்களாவின் சொந்தகாரராக இருக்கும் கிருஷ்ணாவும் அவரது கூட்டாளிகளும் மாட்டிக்கொண்டார்களா? தப்பித்தார்களா என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஹாரர், காமெடி இரண்டும் கலந்த காமெடி த்ரில்லர். பயமுறுத்துவதையும் அதன் மூலம் சிரிக்கவைப்பதையும் கவனத்தில் கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் டி.கே. கதாநாயகன் கிருஷ்ணாவுக்கு காமெடி நன்றாகவே கைவருகிறது. கூடவே ‘சூதுகவ்வும்’ கருணாவும் ரூபா மஞ்சரியும் ஓவியாவும் பின்னே ஒரு பேயும் சேர்ந்துகொள்ள படம் கலைகட்டுகிறது.

கிருஷ்ணாவின் காதலியாக ரூபா மஞ்சரி.., கிருஷ்ணாவை கரெக்ட் பண்ண கவர்ச்சிக்கணைகளை வீசும் ஓவியா. முன்னவர் காமெடி என்றால் பின்னவர் கவர்ச்சியை அள்ளிவீசுகிறார். கருணாவின் சீரியஸ் முகம் பெரிதாக பில்ட் அப் கொடுத்து பின்னே பொசுக்கென ஏமாற்றிவிடுகிறது.

கடைசி கால்மணிநேரம் பிரதர் அடைக்கலமாக வரும் மயில்சாமி போடும் ஆட்டம் அதகளம்.. க்ளைமாக்ஸில் வந்து பங்களாவை சொந்தமாக்கிக் கொள்ளும் மகாநதி சங்கர் அன் கோவின் முடிவு எதிர்பாராத நகைச்சுவை பட்டாசு.. த்ரில்லர் படத்துக்கு பாட்டு எதற்கு என கேட்பதுபோல வந்துபோகின்றன பாடல்கள்.

த்ரில்லர் படம் என்றால் லாஜிக் பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். சரிதான். ஆனால் பங்களாவுக்கு சொந்தக்காரராக வருபவர்கள் எல்லாம் சாகிறார்கள் என்றால் கிருஷ்ணாவுக்கு ஏதும் ஆகாதது ஏன்..? புதைத்தது ஏற்கனவே இறந்தவர்களின் பிணங்கள் என்றால் அவை காணாமல் போவதாக காட்டுவதும் லாஜிக் மிஸ்ஸாகும் இடம் தான்.. மொத்தத்தில் லாஜிக் பார்க்காவிட்டால் இந்த ‘யாமிருக்க பயமே’ உங்களை குலுங்க குலுங்க சிரிக்கவைத்து அனுப்பும்.