தடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி

2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம். எஸ். பாஸ்கர், நாசர் நடித்திருந்த இப்படத்தை வெற்றிவேல் சரவணா சினிமாஸ், பிக் பிரிண்ட் புரொடக்‌ஷ்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தன. குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8 தோட்டாக்கள் கதாநாயகன் வெற்றி நடிக்கும் ஜீவி என்ற படத்தை மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே. கோபிநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சென்றமாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜூன் 22 அதன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தடயமே இல்லாமல் குற்றம் செய்வது, தொடர்பியல், சமூகத்தின் மீதும் வாழ்வின் மீதும் விரக்தியடைந்த இன்றைய இளைய சமுதாயம் என பல்வேறு தளங்களைத் தொட்டுச் செல்கிறது ஜீவி டிரெய்லர். ‘சொசைட்டில நாமெல்லம் வெறும் பொம்மைதான், உருவ பொம்மையாகனும்னா நாம பணக்காரனாகனும்’ என்ற கொள்கையுடைய கதாநாயகனாக வெற்றி தோன்றியுள்ளார். கிரைம் திரில்லர் ரசிகர்களை ஈர்க்கும் படமாக ஜீவி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி, கருணாகரன், ரோகிணி, மைம் கோபி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். கதை திரைக்கதையை பாபு தமிழ் எழுதியுள்ளார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார் வரும் ஜூன்-28ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர் படக்குழுவினர். 8 தோட்டாக்கள் போல இந்தப்படமும் ரசிகர்களை கவரும் என்றே தெரிகிறது.