‘களவாணி-2′ உரிமை யாருக்கு..? இயக்குனர் சற்குணத்திற்கு சிங்காரவேலன் பதிலடி..!

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி-2′ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி-2′ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் உண்மை நிலை என்னவென்று மிக விரிவாக தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தி உள்ளார் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன்.

விமல் தனது A3V சினிமாஸ் சார்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், இந்த களவாணி-2 படத்தை தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்த தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் களவாணி-2 படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர்-17ஆம் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்த தொகையை தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை. இந்தநிலையில் தான் களவாணி-2 படம் ‘வர்மன்ஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது.

பட வேலைகள் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு எனக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தரும்படியும் அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியிருக்கும் என்றும் கூறி விமலுக்கு மீண்டும் மார்ச்-17ஆம் தேதி கடிதம் அனுப்பினேன். அதை பெற்றுக்கொண்ட அவரிடமிருந்து அப்போதும் எந்த பதிலும் வரவில்லை.

அவர்களிடமிருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை.. எங்கள் தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி-2′ படத்திற்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி-2 படத்தை வேறு யாரும் வெளியிட கூடாது என 6 வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

இந்த படத்தின் உரிமை எங்களிடம் தான் இருக்கிறது.. இயக்குனர் சற்குணம் இந்த படத்தை அவர் தயாரித்ததாக சொல்வது சுத்தமான பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று தான் நான் இதைக் கருதுகிறேன்.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என இயக்குனர் சற்குணம் கூறியிருக்கிறார்.. உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகவே பத்திரிக்கை, ஊடகங்கள் களவாணி-2 படம் பற்றி வேறு நபர்கள் சொல்லும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கூறியுள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.