வால்டர் – விமர்சனம்

கும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன, இந்த வழக்கை சிபிராஜ் விசாரிக்கும் போதே மறுநாளே குழந்தைகள் கிடைத்து விடுகின்றன. ஆனால் அப்படி கிடைத்த குழந்தைகள் கொஞ்ச நேரத்திலேயே இறந்து விடுகின்றன என்கிற அதிர்ச்சிகரமான உண்மை சிபிராஜுக்கு தெரிய வருகிறது. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது துப்புத்துலக்கும் சிபிராஜ் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்படி செய்தவர் நட்டி நடராஜ் என்பதும் தெரியவருகிறது.

அவர் ஏன் குழந்தைகளை கடத்துகிறார் என தீவிரமாக விசாரணை நடத்தும் சிபிராஜுக்கு இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர் குறித்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள்..? எதனால் மரணம் அடைந்தார்கள்..? பிறந்த குழந்தையை கடத்தும் அளவுக்கு அந்த கொடூரமான நபர் யார் என க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

சிபிராஜூக்கும் அவரது உயரத்திற்கும் காக்கி சட்டை ரொம்பவே கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. வழக்கமாக அரசியல்வாதியுடன் சவால், ரவுடிகளுடன் மோதல் என மல்லுக்காட்டாமல் ஒரு விசாரணை போலீஸ் அதிகாரியாக சற்றே வித்தியாசமாக தனது கதாபாத்திரத்தி வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது,.

கெட்டவனா நல்லவனா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடும் சவாலான கதாபாத்திரத்தில் நட்டி நடராஜ் வழக்கம்போல துறுதுறு.

நாயகி ஷெரின் காஞ்ச்வாலா.. போலீஸ் அதிகாரியின் வேலை என்ன என புரிந்து கொள்ளாமல் காதல் காதல் என நேரம் காலம் தெரியாமல் சிபிராஜை மட்டுமல்ல நம்மையும் கடுப்பேற்றுகிறார்..

கொஞ்ச நேரமே வந்து போகும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் ஏமாற்றம் அழிகிறது. அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். அரசியல்வாதியாக பவா செல்லத்துரை. கொடுக்கப்பட்ட பில்டப் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவு மிடுக்கு காட்டுகிறார். இனி தொடர்ந்து இவரை நடிகராக பார்க்கலாம். சார்லி வழக்கம் போல குணச்சித்திர நடிப்பில் குறைவைக்கவில்லை.

மருத்துவ உலகில் நடக்கும் அக்கிரமங்களில் ஒன்றை அடையாளம் காட்டும் விதமாக கதையை யோசித்ததற்காக இயக்குநர் யு.அன்புவை பாராட்டலாம். ஆனால் போலீஸ் படத்திற்கே உரிய ஸ்பீட் பிரேக்கரான காதல் காட்சிகளை சொதப்பலாக உருவாக்கி இருபது படத்திற்கு பலவீனம். அதேபோல மினிஸ்டர் சொல்கிறார் என போலீஸ் உயர் அதிகாரியும் அவர் சொல்கிறாரே என சிபிராஜும் மந்திரிக்கு வேண்டாத நல்லவரை என்கவுண்டரில் காலி பண்ணுவதும் அதேசமயம் இறுதிக்காட்சிகளில் மந்திரிக்கு எதிராக நியாயவான் போல இவர்கள் மாறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மந்திரியின் பில்டப் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் சாமி படத்தை ஞாபகமூட்டுகின்றன. ஹீரோ போலீஸ் அதிகாரி என்பதாலேயே அடிகடி விரலால் மீசையை நீவி விடுவதை எப்போதுதான் மாற்ற போகிறார்களோ..?

மருத்துவமனைகளில் மனித நேயம் எப்படி குறைந்து வருகிறது என்பதையும் பிறக்கும் குழந்தைகளை எவ்வளவு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியத்தையும் வலியுறுத்துவதற்காகவே இந்தப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.